கடைசி டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தது சிறப்பானது: காலிஸ்
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் காலிஸ் அறிவித்தார். அதன்படி, டர்பன் மைதானத்தில் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிய காலிஸ், நேற்று சதம் அடித்து ரசிகர்களை மகிழ்வித்தார். 316 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் அவர் 115 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
கடைசி போட்டியில் சதம் அடித்ததை சிறப்பாக கருதுவதாகவும், கடைசி போட்டியில் சதம் அடிக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்திருப்பதாகவும் காலிஸ் தெரிவித்தார்.
“வழக்கமாக 90 ரன்களைத் தாண்டியதும் ஒருவிதமான அழுத்தம் ஏற்படும். ஆனால், கடைசி போட்டியில் 90 ரன்களைக் கடந்தபொது ஏற்பட்ட அழுத்தம் வித்தியாசமாக இருந்தது. சில விக்கெட்டுகள் இழந்தபிறகு எனது சதம் ஆறுதலாக இருந்தது. அணி சரிவில் இருந்து மீள்வதையும் உறுதி செய்தது.
நாங்கள் முதலில் இருந்தே வேகமாக ஆடவேண்டும் என்று நினைத்தோம். இந்தியா பாதுகாப்பாக ஓவரை வீசியதால் ரன் குவிக்க கடினமாக இருந்தது. அவர்களின் ஸ்கோரை நெருங்கியபோது ஆட்டம் எங்களுக்கு சாதகமாக திரும்பியது. நான் விளையாடும் கடைசி போட்டி நிச்சயம் வெற்றி பெறும்” என்று காலிஸ் நம்பிக்கை தெரிவித்தார்.
மொத்தம் 165 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள காலிஸ் 13 ஆயிரத்து 289 ரன்கள் அடித்துள்ளார். இதன்மூலம் டெஸ்ட் போட்டியில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் 3-வது இடத்தில் இருக்கிறார்.
No comments: