புத்தக சுமையை குறைக்க பள்ளி மாணவர்களுக்கு கையடக்க கம்ப்யூட்டர்: குஜராத் மாநிலத்தில் அறிமுகம்
பள்ளி மாணவர்களின் புத்தக சுமை பெற்றோர்களையும், கல்வியாளர்களையும் கவலை அடையச் செய்கிறது. பள்ளி குழந்தைகளின் முதுகில் சுமைக்க முடியாத அளவிற்கு பாடப் புத்தகங்களை சுமக்கும் நிலையை மாற்ற மத்திய மனித வளத்துறை பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது.
நவீன தொழில் நுட்பத்தின் மூலமாக புதிய உத்திகளை கையாளவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் புத்தக சுமையை குறைக்கும் வகையில் பாடத்திட்டங்கள் 3 பிரிவாக பிரிக்கப்பட்டு தற்போது செயல்படுத்தப்படுகின்றன. காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுக்கான பாடங்களை 3 பருவமாக பிரித்து புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
மதிப்பெண் அடிப்படையில் இல்லாமல் கிரேடு முறையில் மாணவர்களின் தேர்வு முறைகள் மாற்றப்பட்டுள்ளன. இந்த திட்டம் மாணவர்களை மட்டுமின்றி பெற்றோர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இதைவிட ஒருபடி மேலாக குஜராத் மாநிலம் ராஜ்காட்டில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு கையடக்க கம்ப்யூட்டர் (டேப்லட்ஸ்) வழங்கப்பட்டுள்ளது.
அதிக பாடப்புத்தகங்கள் கொண்ட பைகளை சுமந்து செல்வதற்கு பதிலாக இந்த கையடக்க கணினி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
‘சங்கன்வா’ என்ற பள்ளியில் 5–ம் வகுப்பு முதல் 7–ம் வகுப்பு வரை உள்ள 70 மாணவ–மாணவிகளுக்கு இந்த கம்ப்யூட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. புத்தக பையை சுமக்காமல் எளிதாக கையடக்க கம்ப்யூட்டரை எடுத்து செல்கின்றனர்.
கையடக்க கணினியில் பெரிய கம்ப்யூட்டரில் உள்ள எல்லா வசதிகளும் உள்ளன. அனைத்து பாடத்திட்டங்களும் அதில் கொடுக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து பள்ளி முதல்வர் கூறும் போது, பள்ளி மாணவர்களின் புத்தக சுமையை குறைக்கும் வகையில் கையடக்க கணினி வழங்கப்பட்டுள்ளது. கல்வித் துறையில் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் குழந்தைகளின் பாடசுமை குறைகிறது.
இதற்காக பள்ளி வளாகத்திலும் நவீன வகுப்பறையிலும் வைப்பு தகவல் தொழில்நுட்ப வசதி பொறுத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் பள்ளி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து பாடத்திட்டங்களும் குஜராத் மொழியில் தயாரித்து சாப்ட்வேர் மூலம் கையடக்க கணினியில் பொறுத்தப்பட்டுள்ளது. பள்ளி தேர்வுகள் உள்ளிட்ட அனைத்து செயல் முறைகளும் அதில் இடம் பெற்றுள்ளது என்றார்.
No comments: