பெங்களூரில் எடிஎம் கொள்ளையனை பிடித்த காவலாளி
பெங்களூரில் ஏடிஎம்மில் கொள்ளையடிக்க வந்த கொள்ளையனை காவலாளி பொலிசில் பிடித்துக்கொடுத்துள்ளார்.
பெங்களூர் மடிவாளா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேகூர் ரோடு, ஒங்கசந்திரா-ஆதர்ஷா லேஅவுட்டில் இந்திய ஸ்டேட் வங்கியின் கிளை அமைந்துள்ளது.
வங்கியை ஒட்டியே அதன் ஏடிஎம் மையமும் உள்ளது. சகாபுதீன் என்ற காவலாளி இரவு நேர காவலுக்கு இருந்தார். நேற்று அதிகாலை 4 மணியளவில் பைக்கில் வந்த இருவர் ஏடிஎம் மையத்திற்குள் சென்றுள்ளனர். தூக்க கலக்கத்தில் இருந்த சகாபுதீனை கத்தி முனையில் மிரட்டி கை, கால்களை கட்டிவிட்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தனர்.
அந்தநேரத்தில் ரோந்துப்பணியில் இருந்த பொலிசார் அவ்வழியாக வந்துள்ளனர். இதைப்பார்த்த கொள்ளையர்கள் ஏடிஎம் கொள்ளை முயற்சியை பாதியிலேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோட முற்பட்டனர்.
சுதாரித்துக்கொண்ட சகாபுதீன் தனது கை கட்டை அவிழ்த்துக்கொண்டு கொள்ளையர்களின் கத்தியை பறித்து தாக்கியுள்ளார். அதில் ஒரு கொள்ளையனுக்கு வெட்டு காயம்பட்டு நிலை குலைந்தான். இதை பயன்படுத்திக் கொண்ட சகாபுதீன் அவனை பிடித்து ரோந்து பொலிசிடம் ஒப்படைத்தார்.
இதையடுத்து பொலிசார் அவனை கைது செய்து விசாரணை நடத்தியதில் கொள்ளையன் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த சந்தீப் என்று தெரியவந்தது. காயமடைந்த சந்தீப் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளான்.
பேகூர் ரோட்டில் காலை 4.30 மணிக்கே ஹொட்டல்கள், டீக்கடைகள் திறக்கப்பட்டுவிடும். ஆயினும் கொள்ளையர்கள் அச்சமின்றி கொள்ளைமுயற்சியில் இறங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
No comments: