Header Ads

கலெக்டர் காலில் விழுந்து தாய் கதறல் நண்பர்கள் அழைத்து சென்ற மகன் கொலையா

திருச்சி: நண்பர்கள் அழைத்துச் சென்று எனது மகனை கொலை செய்துவிட்டதாக திருச்சி கலெக்டரின் காலில் விழுந்து பெண் கதறினார். திருச்சி வாழவந்தான்கோட்டை அய்யம்பட்டி பொன்னர் நகரை சேர்ந்தவர் சண்முகம். கூலித்தொழிலாளியான இவர் இறந்துவிட்டார். இவரது மனைவி கலாவதி (32). இவர்களுக்கு மணிகண்டன் (17), விக்னேஷ் (14) என்ற 2 மகன்கள் உள்ளனர். கடந்த ஜூலை 28ம் தேதி, அதே பகுதியை சேர்ந்த 3 பேர் வந்து மணிகண்டனை அழைத்து சென்றுள்ளனர். இதுகுறித்து 3 பேரிடமும் கேட்டபோது, சரியான பதில் அளிக்கவில்லை. 

இதுபற்றி கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி துவாக்குடி போலீசில் அளித்த புகாரில், ‘எனது மகன் மணிகண்டனை நண்பர்கள் 3 பேர்  அழைத்து சென்றனர். காதல் விவகாரத்தில் மணிகண்டனை அவர்கள் கொலை செய்திருப்பதாக தெரிகிறது‘ என்று தெரிவித்திருந்தார். ஆனாலும் மணிகண்டன் பற்றி துப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் நேற்று காலை மனுவுடன் கலெக்டர் அலுவலகம் வந்த கலாவதி, கலெக்டர் ஜெயஸ்ரீயின் காலில் திடீரென விழுந்து, ‘என் மகனை கொன்று விட்டார்கள். கொலைகாரர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்‘ என கதறினார். கலாவதிக்கு கலெக்டர் ஆறுதல் கூறி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

No comments:

Powered by Blogger.