இந்தியாவில் இலவச அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளவிருக்கும் துபாய்வாழ் இந்தய வம்சாவளி மருத்துவர்
துபாயில் வாழ்ந்து வரும் பிரபல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவரான சஞ்சய் பரஷார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார். இவர் வரும் ஜனவரி மாதம் மகாராஷ்டிர மாநிலத்தின் நாக்பூர் அருகில் உள்ள கிராமங்களில் 45 அறுவை சிகிச்சைகளை இலவசமாக செய்ய இருப்பதாக பத்திரிகை செய்தி வெளிவந்துள்ளது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மருத்துவ முகாமில் பிளவுபட்ட உதடுகள் மற்றும் தீக்காயத் தழும்புகளால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட உள்ளது. நாக்பூரைச் சேர்ந்த இரண்டு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவர்களும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு மருத்துவரும் சஞ்சய் பரஷாருடன் இணைந்து இந்த சிகிச்சைகளைச் செய்கின்றனர்.
துபாயில் லிப்போசக்ஷன், தொப்பையைக் குறைத்தல், முடி வளரும் அறுவை சிகிச்சை போன்றவைகளைச் செய்யும் இவர் தனது சம்பாத்தியத்தில் இந்தியாவில் உள்ள ஏழை மக்களுக்கு இந்த இலவச சிகிச்சைகளைச் செய்துவருவதாகக் கூறப்படுகின்றது. இதை செய்வது தனக்கு விருப்பமான ஒன்றாகக் கூறும் டாக்டர் சஞ்சய் இந்தியாவில் உள்ள எளிய மக்களுக்கு இத்தகைய சீரமைப்பு சிகிச்சைகளைத் தான் தொடர்ந்து இலவசமாக செய்யவிருப்பதாகவும் கூறினார்.
பிளவுபட்ட உதடுகளைக் கொண்டவர்களுக்கு பேச்சு மற்றும் உணவுப் பழக்கங்கள் பாதிக்கப்படுகின்றன. மேலும் இந்தக் குறைபாடு உளவியல் ரீதியாகவும் அவர்களைப் பாதிக்கும். ஆயினும், இதன் தீவிரத்தைப் பொறுத்து நான்கு முறை அறுவை சிகிச்சை தேவைப்படும். எனவே பெற்றோர்கள் ஆரம்பநிலையிலேயே இதனைக் கண்டறிதல் வேண்டும் என்றும் டாக்டர் சஞ்சய் குறிப்பிடுகின்றார்.
No comments: