மீண்டும் ஒரு காதல் திருமணத்தால் பிரச்சினை: தர்மபுரி இண்டூர் காலனியில் போலீஸ் குவிப்பு
தர்மபுரியில் இளவரசன்– திவ்யா காதல் திருமணத்தால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டன. பொருட்கள் சூறையாடப்பட்டன. பள்ளி– கல்லூரி மாணவ– மாணவிகளின் கல்விசான்றி தழ்கள் மற்றும் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரணமும் வழங்கியது. அதன் பிறகு இளவரசன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அப்போதும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. அதன் பிறகு தர்மபுரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பின்னர் அது காலாவதி ஆனது. என்றாலும் அவ்வப்போது ஏற்படும் காதல் –கலப்பு திருமணத்தால் பிரச்சினைகள் உருவாகி வருகிறது. தற்போது எம்.ஏ.பி.எட்.படித்து ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று ஆசிரியர் பணிக்கு காத்து இருக்கும் ஒருவரும், இளம்பெண் ஒருவரும் காதல்–கலப்பு திருமணம் செய்ததால் இண்டூர் காலனியில் மீண்டும் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
இளம்பெண்ணை ஒப்படைத்து விடுவதாகவும், அவர் பாட்டி வீட்டுக்கு சென்று வந்ததாக ஊரில் சொல்லி சமாளித்து விடுவதாக கூறியும் அந்த இளம்பெண்ணை மாப்பிள்ளை வீட்டார் அனுப்பவில்லை. மாப்பிள்ளையின் உறவினர் ஒருவர் சப்–இன்ஸ்பெக்டராக இருக்கிறார். அவர் காதல்–கலப்பு மணம் செய்த ஜோடியை பிரிக்க கூடாது என்று கூறி விட்டார். இதனால் இண்டூர் காலனியில் மீண்டும் மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டு அங்கு பதட்டம் நிலவுகிறது. மோதலை தடுக்க அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. காதல்–கலப்பு திருமணம் செய்த ஜோடியினர் தலைமறைவாக உள்ளனர். இது குறித்து போலீசில் புகார் எதுவும் கொடுக்கவில்லை என்றாலும் கூட மீண்டும் ஒரு மோதல் வந்து விடக்கூடாது என்ற முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
No comments: