நடத்தையில் சந்தேகம்: அம்மி கல்லை தலையில் போட்டு மனைவியை கொன்ற கணவர்
கடலூர் ரெட்டிச்சாவடி அருகே உள்ள கிளிஞ்சிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் முருகவேல் (வயது 38), மாட்டுவண்டி தொழிலாளி. இவரது மனைவி பூங்கொடி (25). இவர்களுக்கு 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு திருக்குமரன் என்ற மகனும், காவியா என்ற மகளும் உள்ளனர்.
முருகவேல் வீட்டுக்கு நேற்று பூங்கொடியின் தந்தை தட்சினாமூர்த்தி மற்றும் தாய் ஆகியோர் வந்திருந்தனர். நேற்று மாலை முருகவேலுக்கும், பூங்கொடிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அவர்களை தட்சினாமூர்த்தி சமாதானம் செய்து வைத்தார். பின்னர் இரவு அனைவரும் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றனர்.
முருகவேல் வீட்டின் தனி அறையில் சென்று படுத்து கொண்டார். பூங்கொடி அவரது மகன், மகள் மற்றும் அவரது பெற்றோர் வீட்டின் முன் அறையில் படுத்து தூங்கினார்கள்.
பூங்கொடி மீது முருகவேல் கடுங்கோபத்தில் இருந்தார். அவரை கொலை செய்ய முடிவு செய்தார். இதையடுத்து அவர் நள்ளிரவு 11 மணி அளவில் வீட்டின் ஒரு பகுதியில் கிடந்த அம்மி கல்லை தூக்கிக்கொண்டு முன் அறைக்கு வந்தார்.
அங்கே தூங்கிக்கொண்டிருந்த பூங்கொடியின் தலையில் அம்மிகல்லை தூக்கி போட்டார். இதில் அவர் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பிணமானார். உடனே பூங்கொடியின் பிள்ளைகளும், பெற்றோரும் திடுக்கிட்டு எழுந்தார்கள். அவர்களை பார்த்ததும் முருகவேல் பின்பக்க கதவை திறந்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பூங்கொடியின் பிணத்தை பார்த்து அவரது பிள்ளைகளும், பெற்றோரும் கதறி துடித்தனர்.
இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜவகர்லால் மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முருகவேலை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை கிராம நிர்வாக அலுவலர் மூலம் ரெட்டிச்சாவடி போலீசில் முருகவேல் சரண் அடைந்தார். கொலைக்கான காரணம் குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது பல்வேறு தகவல்கள் கிடைத்தன.
முருகவேலுவுக்கு கண்பார்வை குறைபாடு இருந்தது. திருமணத்தின்போது அவர் பெண் வீட்டாரிடம் அதை தெரிவிக்கவில்லை. மனைவி பூங்கொடியின் நடத்தையில் முருகவேல் சந்தேகம் அடைந்தார். இது தொடர்பாக முருவேலுக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. தீபாவளியன்றும் தகராறு ஏற்பட்டது. எனவே பூங்கொடி தனது பிள்ளைகளுடன் விழுப்புரம் பகன்டை கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
சில நாட்களுக்கு முன்பு முருகவேல் அங்குசென்று சமாதானம் பேசி மனைவியையும், குழந்தைகளையும் ஊருக்கு அழைத்து வந்தார். நேற்று மாலை மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்து பூங்கொடியை முருகவேல் கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
No comments: