இளைய தலைமுறையின் ரோல் மாடல் சசிகுமார்
இயக்குனர், நடிகர், சசிகுமார் தயாரித்துள்ள படம், தலைமுறைகள். பாலுமகேந்திரா இயக்கி நடித்துள்ள இந்தப் படம் சமீபத்தில் வெளியானது. இந்தப் படம் பிரபல இயக்குனர்கள் மகேந்திரன், பாரதிராஜா ஆகியோருக்கு நேற்று திரையிட்டுக் காட்டப்பட்டது. படத்தைப் பார்த்த இயக்குனர் மகேந்திரன் பேசியதாவது:இங்கே பேசிய அனைவரும் படத்தையும் பாலுமகேந்திராவையும் பாராட்டினார்கள். அவரது நடிப்புக்கு விருது கிடைக்கலாம். பாலுமகேந்திரா நல்ல படம் எடுப்பதோ அவரைப் பாராட்டுவதோ புதிதில்லை. அவருக்கோ, பாரதிராஜாவுக்கோ, எனக்கோ பாராட்டு என்பது புதிதில்லை.
ஆனால், இப்படி பாராட்டும் ஒரு தருணத்தை இங்கு உருவாக்கிக் கொடுத்த ஆதார ஸ்ருதி சசிகுமார். அவர்தான் இங்கு பாராட்டப்பட வேண்டியவர். வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிற ஒரு கலைஞன், மூத்த இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்து தயாரிப்பது என்பது அசாத்தியமான காரியம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாலுமகேந்திரா படம் இயக்கி இருக்கிறார். மூத்த தலைமுறை இயக்குனராக, படைப்பாளியாக அவருக்கு மதிப்பளித்து எந்த இடையூறும் இல்லாமல் படத்தை தயாரித்திருக்கிற சசிகுமார், இளையதலைமுறைக்கு ரோல் மாடலாக இருக்கிறார். இவ்வாறு மகேந்திரன் பேசினார்.
No comments: