மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தேடும் பணியில் 2 இந்திய கப்பல்கள் மற்றும் 1 ஏவுகனை
இந்தியாவின் சார்பில் ருக்மணி உட்பட 2 கப்பல்களும், 1 ஏவுகனையும் தேடுதல் வேட்டைகோலாலம்பூர்: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங்குக்கு புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்சை சேர்ந்த போயிங் விமானம் கடந்த 8ம் தேதி அதிகாலை தெற்கு சீன கடல் பகுதியில் மாயமானது. இதில் 5 இந்தியர்கள் உட்பட 239 பேர் பயணம் செய்தனர். அவர்களின் கதி என்ன ஆனது என்பது தெரியவில்லை. மாயமான விமானத்தை கண்டுபிடிக்க மலேசியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 12 நாடுகள் 39 விமானங்கள் மற்றும் 42 கப்பல்களை தேடும் பணியில் ஈடுபடுத்தியுள்ளன. விமானம் வியட்நாம் வான் பகுதியில் தெற்கு சீன கடலில் விழுந்திருக்கலாம் என முதலில் சந்தேகிக்கப்பட்டது. பின்னர் மலாக்கா கடல் பகுதியில், அந்த விமானம் கடைசியாக பறந்ததாக மலேசிய ராணுவம் தெரிவித்தது. இதையடுத்து அப்பகுதியில் கடந்த 5 நாளாக தேடுதல் வேட்டை நடந்தது. ஆனால் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து அந்தமான் கடல் பகுதி வரை தேடும் பணியை விரிவு படுத்த மலேசியா முடிவு செய்தது. இந்நிலையில் விமானம் மாயமானது குறித்த இந்தியாவின் கவலையை, மலேசியா அரசர் அப்துல் கலிம் முவாத்சாம் ஷாவிடம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். மலேசியாவின் தேடும் முயற்சியை பாராட்டிய பிரணாப், இது தொடர்பாக இந்திய அதிகாரிகள், மலேசிய அதிகாரிகளுடன் பேசி வருவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து அந்தமான் கடல் பகுதியில் விமானத்தை தேடும் பணியில் இந்தியா உதவ வேண்டும் என மலேசியா வேண்டுகோள் விடுத்தது.
இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘’மலேசிய விமானத்தை தேடும் பணியில் உதவ இந்தியா தயாராக இருக்கிறது’’ என தெரிவித்தார். மலேஷிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஹகசாமுதீன் உசேன் கூறுகையில், ‘‘தேடுதல் பணியில் இந்தியா, ஜப்பான், புருனே ஆகிய நாடுகளும் இணைகின்றன’’ என்றார்.
தயார் நிலையில் இந்திய விமானப்படை
அந்தமான் நிகோபார் தீவுகளில் இந்திய ராணுவத்தின் முப்படைகளைச் சேர்ந்த கட்டுப்பாட்டு மையம் உள்ளது. இங்கு கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவை ரோந்து பணியை வழக்கமாக மேற்கொண்டு வருகின்றன. மலேசியாவின் வேண்டுகோள் குறித்து இந்திய விமானப்படை செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘‘மலேசிய விமானத்தை தேடும் பணியில் ஈடுபட விமானங்களை தயார் நிலையில் வைத்திருக்கிறோம். இதற்கான உத்தரவு கிடைத்ததும், தேடும் பணியில் ஈடுபடுவோம். அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் மலாக்கா கடல் பகுதியில் இந்திய விமானப்படை தேடும் பணியை மேற்கொள்ளும். அந்தமான் பகுதியில் உள்ள விமானப்படை தளத்தில் டோர்னியர் ரக விமானங்களும், எம்.ஐ.17 ரக ஹெலிகாப்டர்களும் உள்ளன. கடற்படை தளத்தில் பி-81 மற்றும் டி.யு-142 ரக கடல் கண்காணிப்பு விமானங்களும் உள்ளன. இந்த விமானங்கள் தேடும் பணியில் ஈடுபடுத்தப்படலாம் என தெரிகிறது. இதில் இந்தியாவின் சார்பில் ருக்மணி உட்பட 2 கப்பல்களும், 1 ஏவுகனையும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன.
* மலேசிய விமானம் கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் 239 பேருடன் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு சென்ற போது மாயமானது.
* விமானத்தை தேடும் பகுதி நேற்று 27,000 சதுர மைலாக விஸ்தரிக்கப்பட்டது. ஏற்கனவே தேடிய பகுதியைவிட இரண்டு மடங்கு கூடுதல் பகுதியில் தேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* விமானம் பயணம் செய்த பாதை குறித்தும், ரேடார் சிக்னல் தொடர்பு குறித்தும் குழப்பம் நீடிப்பதால், தேடுதல் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
* மலேசியாவின் வடகிழக்கு கடல் பகுதி மற்றும் வியட்நாமின் தென் மேற்கு பகுதியில் 12 நாடுகளைச் சேர்ந்த 42 கப்பல்கள், 39 விமானங்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.
No comments: