கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்த பிறகும் மலேசிய விமானம் 4 மணி நேரம் பறந்தது?
கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானம், கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்த பிறகு 4 மணி நேரம் பறந்திருப்பதாக அமெரிக்கா திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. மலேசியாவில் இருந்து கடந்த சனிக்கிழமை 227 பயணிகள் மற்றும் 12 விமான ஊழியர்களுடன் சீன தலைநகர் பீஜிங் புறப்பட்ட விமானம், தெற்கு சீன கடலின் மீது பறந்து கொண்டிருந்தபோது திடீரென மாயமானது. கோலாலம்பூர் விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை அது இழந்தது. அது கடலில் விழுந்து மூழ்கியதா? அல்லது வேறு இடத்தில் எங்காவது விழுந்து நொறுங்கியதா? என்று இதுவரை தெரியவில்லை. சீனா, மலேசியா, வியட்நாம், சிங்கப்பூர் நாடுகளை சேர்ந்த 40 விமானங்கள், 43 கடற்படை கப்பல்கள், தெற்கு கடல் முழுவதும் நேற்றும் 6வது நாளாக விமானத்தை தேடின. அதேபோல், அந்தமான், மலாக்கா கடல் பகுதிகளில் இந்திய விமானங்கள் தேடி வருகின்றன.
ஆனால் இதுவரை ஒரு துப்பு கூட கிடைக்கவில்லை. இந்நிலையில், மலேசியா - வியட்நாம் இடையே விமானம் மாயமானதாக சந்தேகிக்கப்படும் தெற்கு சீன கடல் பகுதியில் விமானத்தின் 3 உடைந்த பாகங்கள் மிதப்பதாக சீனா நேற்று தெரிவித்தது. தனது செயற்கைக்கோள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அவை, மாயமான விமானத்தின் பாகங்கள்தானா என்பது உறுதியாக தெரியவில்லை என்றும் அது தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, மலேசியாவும் வியட்நாமும் அந்த இடத்துக்கு விமானங்கள் மற்றும் கப்பல்களை அனுப்பின. ஆனால், சீன குறிப்பிட்ட இடத்தில் விமானத்தின் உடைந்த பாகங்கள் எதுவும் இல்லை என்பது உறுதியானது. இதேபோல், விமானத்தை தேடும் படலத்தில் அமெரிக்காவும் உதவி வருகிறது. இந்நாட்டை சேர்ந்த வால் ஸ்டிரீட் பத்திரிகையில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட செய்தி ஒன்றில், ‘கோலாலம்பூர் விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் ரேடியோ தொடர்பை விமானம் இழந்த பிறகும், 4 மணி நேரம் அது பறந்துள்ளது.
விமானத்தின் இன்ஜின்களில் இருந்து கிடைத்த தகவலின் மூலம் இது கண்டறியப்பட்டு உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது. விமானத்தின் இன்ஜின்களை பராமரிக்கும் நடவடிக்கையின் ஒரு அம்சமாக, இன்ஜின்களின் செயல்பாடு தரை கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு இருக்கிறது’ என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. விமானத்தை தீவிரவாதிகள் கடத்தி சென்று இருக்கலாம் என்ற சந்தேகம் ஒருபுறம் நிலவி கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்க பத்திரிகை வெளியிட்ட இந்த புதிய தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அப்படிப்பட்ட சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்று மலேசிய போக்குவரத்து துறை தற்காலிக அமைச்சர் ஹிஷமுதின் அகமது தெரிவித்தார். விமானத்துக்கு என்ன நேர்ந்தது என்ற தகவல் உறுதி செய்யப்படும் வரையில், விமானத்தை தேடும் பணியை நிறுத்த மாட்டோம் என்றும் அவர் உறுதியாக கூறினார்.
No comments: