Header Ads

இலங்கையில் மகனை மீட்க போராடிய தமிழ் பெண் சிறையில் அடைப்பு,,

இலங்கையின் உச்சக்கட்டப் போருக்குப் பின்னர் விடுதலைப் புலி இயக்கத்தில் இருந்த 15 வயது சிறுவனை இலங்கை ராணுவத்திடம் அவனது தாய் பாலேந்திரன் ஜெயக்குமாரி என்பவர் கடந்த 2009-ம் ஆண்டு ஒப்படைத்தார்.

அதன் பின்னர், போர்க்கைதிகளில் விடுதலை செய்யப்பட்டவர்கள் என்று புகைப்படங்களுடன் கூடிய ஒரு பட்டியலை இலங்கை அரசு வெளியிட்டது. அதில் அந்த 15 வயது சிறுவனின் படமும் இடம் பெற்றிருந்தது. 

அவனை தங்களிடம் ஒப்படைக்காமலேயே விடுவித்து விட்டதாக கபட நாடகம் ஆடும் ராஜபக்சே அரசின் இன அழிப்பு செயலுக்கு எதிராக பாலேந்திரன் ஜெயக்குமாரி கொதித்தெழுந்தார்.

போருக்கு பிறகு ‘வெள்ளை வேன்’களில் ஏற்றிச் செல்லப்பட்ட தமிழர்களின் நிலையைப் போலவே தனது மகனைப் பற்றி எந்த தகவலும் கிடைக்காமல் போகவே, போர்க்காலத்தின் போது காணாமல் போனவர்களை தேடும் பெண்களின் குழுவில் பாலேந்திரன் ஜெயக்குமாரி மற்றும் அவரது மகள் விதுஷாயினி ஆகியோர் இணைந்து ஊடகங்களில் அரசுக்கு எதிராக பேட்டியளித்து வந்தனர்.

கடந்த ஆண்டில் பிரிட்டைன் பிரதமர் டேவிட் கேமரூன் இலங்கை வந்திருந்தபோது, அவரை சந்தித்து தங்களின் குறைகளை கூற முயன்ற பெண்கள் கூட்டத்தில் பாலேந்திரன் ஜெயக்குமாரியும், விதுஷாயினியும் இடம்பெற்றிருந்த காட்சிகள் ஊடகங்களில் வெளி வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், வடக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அவர்களது வீட்டை நேற்று முந்தினம் இரவு நூற்றுக்கணக்கான இலங்கை ராணுவத்தினரும், போலீசாரும் முற்றுகையிட்டனர்.

பாலேந்திரன் ஜெயக்குமாரி மற்றும் அவரது மகள் விதுஷாயினி ஆகியோரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தி,  அவர்கள் இருவரையும்  கைது செய்து அழைத்து சென்றதாக இலங்கையில் உள்ள ஒரு மனித உரிமை அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

அவர்கள் என்ன காரணத்துக்காக கைது செய்யப்பட்டனர்? எங்கே அழைத்து செல்லப்பட்டனர்? என்பது பற்றிய எந்த தகவலும் போலீஸ் தரப்பில் வெளியிடப்படவில்லை. 

இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளிவரத் தொடங்கியதும் அவர்கள் இருவரும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் பாலேந்திரன் ஜெயக்குமாரியை 16 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிபதி, விதுஷாயினியை சிறுமியர் காப்பகத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் இன்று அதிகாலை 2 மணியளவில் ‘பி.டி.ஐ’ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:

Powered by Blogger.