அமலாவுக்கு டிக்கெட் கேட்டேனா?: நாகார்ஜுனா விளக்கம்
பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா நேற்று அமதாபாத் சென்று பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இருவரும் 1 மணி நேரம் பேசிக் கொண்டு இருந்தனர்.
சமூக சேவையில் ஈடுபட்டு வரும் தனது மனைவி அமலாவுக்கு தேர்தல் டிக்கெட் கேட்பதற்காக அவர் மோடியை சந்தித்ததாக ஆந்திராவில் பரபரப்பாக பேசப்பட்டது.
ஆனால், அதை நாகர்ஜூனா மறுத்தார். மூத்த தலைவர் வெங்கையாநாயுடு அழைப்பின் பேரில் மோடியை சந்தித்ததாக அவர் கூறினார். மோடியை சந்தித்தது குறித்து நாகர்ஜூனா கூறியதாவது:–
ஏழைகளுக்கும், கார்ப்பரேட் மருத்துவமனையில் இலவச சிகிச்சை அளிந்த மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகரரெட்டி கொண்டு வந்த மருத்துவ திட்டம் என்னை கவர்ந்தது. அதற்காகவே அவரது அரசின் விளம்பர படத்தில் நடித்தேன்.
அப்போது பாரதீய ஜனதா தலைவர் வெங்கையாநாயுடு, குஜராத் சென்று வாருங்கள் மோடியின் திட்டம் உங்களை கவரும் என்றார். அவரது அழைப்பை ஏற்று குஜராத் சென்றேன். அங்குள்ள மாதிரி கிராமத்தை பார்த்தேன். ஹைடெக் நகரமான ஐதராபாத்தில் கூட 3 மணி நேரம் மின்வெட்டு உள்ளது. ஆனால், குஜராத்தில் 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கிறது.
குஜராத் மாநில வளர்ச்சி என்னை மிகவும் கவர்ந்துள்ளது. மோடி பிரதமர் ஆனால் ஆந்திராவும், குஜராத் போல முன்னேற்றம் அடையும் என்று கருதுகிறேன். அதனால் அவரை நேரில் சந்தித்து எனது ஆதரவை தெரிவித்தேன்.
பாரதீய ஜனதா கட்சியில் சேரும் எண்ணமோ, பிரசாரம் செய்யும் திட்டமோ இல்லை. எனக்கோ, எனது மனைவிக்கோ தேர்தல் சீட் கேட்கவில்லை.
எங்கள் குடும்பத்தில் யாருக்கும் அரசியல் ஆர்வம் இல்லை. சும்மா சீட் கொடுத்தாலும் போட்டியிட மாட்டோம்.
இவ்வாறு நாகர்ஜூனா கூறினார்.
No comments: