கோச்சடையான் பாடல் வெளியீட்டில் ரஜினி, அமிதாப்பச்சன் பங்கேற்பு...
ரஜினியின் ‘கோச்சடையான்’ பட பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏற்கனவே இருமுறை இப்பாடல்களை வெளியிடும் தேதியை அறிவித்து பிறகு தள்ளி வைத்தனர். தற்போது வருகிற 9–ந்தேதி ‘கோச்சடையான்’ பாடல் வெளியீட்டு விழா நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சத்யம் திரையரங்கில் காலை 10.30 மணிக்கு இவ்விழா நடக்கிறது. இதில் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் கலந்து கொள்கிறார். ரஜினி மற்றும் ‘கோச்சடையான்’ பட கதாநாயகி தீபிகா படுகோனே மற்றும் படத்தில் நடித்துள்ள சரத்குமார், ஆதி, ஷோபனா, ஜாக்கி ஷெராப், நாசர் போன்றோரும் கலந்து கொள்கிறார்கள்.
ரஜினியும், அமிதாப்பச்சனும் ஒரே மேடையில் தோன்றுவதால் ரசிகர்கள் கூட்டம் திரளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விழாவுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விழா அழைப்பிதழை 3 டியில் தயார் செய்துள்ளனர். சீனாவில் இது அச்சிடப்பட்டு உள்ளது. ரஜினி உருவம் 3டியில் தோன்றுவது போல் பிரத்யேகமாக வடிவமைத்துள்ளனர். ஓரிரு தினங்களில் இந்த அழைப்பிதழ்கள் சென்னை வருகின்றன. பிறகு அவை சிறப்பு விருந்தினர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் டிரெய்லரையும் இந்த விழாவில் வெளியிடுகின்றனர். ‘கோச்சடையான்’ படம் தமிழ், தெலுங்கு, இந்தி, பஞ்சாபி, மராட்டி என ஆறு இந்திய மொழிகளில் வெளியாகிறது. ஒரே நேரத்தில் ஆறு மொழிகளில் ஓடும் முதல் திரைப்படம் ‘கோச்சடையான்’, கோடையில் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாதம் இறுதியில் படத்தை தணிக்கைக்கு அனுப்புகின்றனர்.
‘கோச்சடையான்’ படத்துக்கு பாடல்களை எழுதிய கவிஞர் வைரமுத்து கூறும்போது ‘கோச்சடையான்’ உலக படம். நவீன தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது. இதில் கிளைமாக்ஸ் பாடலை எழுதியது தனி அனுபவமாக இருந்தது. இந்த பாடலை ஏ.ஆர்.ரகுமானே பாடி இருக்கிறார்.
ரஜினி ஒவ்வொரு பாடலையும் கேட்டு பாராட்டினார். தொழில்நுட்ப அளவில் இது அனிமேஷன் படமே தவிர எல்லா படங்களையும் போலவே அனைத்து அம்சங்களுடன் ரசித்து பார்க்கக்கூடிய படமாகவே இது இருக்கும் என்றார்.
No comments: