தோல்விக்காக எங்களை குற்றம்சாட்ட வேண்டாம்: வீராட்கோலி
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வி அடைந்ததன் மூலம் இந்திய அணி கிட்டத்தட்ட வெளியேறிய நிலையில் உள்ளது.
முதலில் விளையாடிய இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 245 ரன் எடுத்தது. அம்பதிராயுடு 58 ரன்னும், ரோகித்சர்மா 56 ரன்னும் எடுத்தனர். அஜ்மல் 3 விக்கெட்டும், ஹபிஸ், தல்கா தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் விளையாடிய பாகிஸ்தான் 2 பந்து எஞ்சி இருந்தபோது 9 விக்கெட் இழப்புக்கு 249 ரன் எடுத்து 1 விக்கெட்டில் வெற்றி பெற்றது.
அஸ்வின் வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரில் அப்ரிடி அடுத்தடுத்து 2 சிக்சர் அடித்து வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார். அவர் 18 பந்தில் 34 ரன் (2 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார்.
ஹபீஸ் 75 ரன்னும், சோயிப் மசூத் 38 ரன்னும் எடுத்தனர். அஸ்வின் 3 விக்கெட்டும், அமித் மிஸ்ரா, புவனேஸ்வர்குமார் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
தோல்வி குறித்து இந்திய அணியின் தற்காலிக கேப்டன் வீராட்கோலி கூறியதாவது:–
முக்கிய கட்டங்களில் நாங்கள் செய்த சிறிய தவறுகளால் ஆட்டத்தை இழந்துவிட்டோம். இந்த தவறுகளை இனி செய்ய மாட்டோம் என்று நம்புகிறோம்.
நாங்கள் இளம் வீரர்களை கொண்ட அணி. இதனால் தோல்விக்காக எங்களை யாரும் குற்றம் சாட்ட வேண்டாம்.
கடைசி 2 போட்டியில் நாங்கள் போராடி தான் தோற்றோம். எனது வீரர்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். நாங்கள் 20 முதல் 30 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். பவுலிங், பீல்டிங் சிறப்பாக அமைந்ததால் போராடினோம்.
இந்த தோல்வி எனக்கு அதிர்ச்சியை கொடுக்க வில்லை. இந்த போட்டி மூலம் எனக்கு நல்ல அனுபவம் கிடைத்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்ரிடி கூறும்போது, நான் நெருக்கடியில் தான் விளையாடினேன். இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக ஆடி வெற்றி பெற வைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
முக்கியமான போட்டியில் எனது ஆட்டத்தை சரியான நேரத்தில் வெளிப்படுத்தி உள்ளேன். ஆசிய கோப்பையை தக்க வைப்பதே எங்களது இலக்காகும் என்றார்.
ஆசிய கோப்பை போட்டியில் இதுவரை 6 ஆட்டம் முடிந்துள்ளன. பாகிஸ்தான் 2 வெற்றி, 1 தோல்வியுடன் 9 புள்ளி பெற்று உள்ளது.
இலங்கை அணி 2 வெற்றியுடன் 8 புள்ளியும், இந்தியா 1 வெற்றி 2 தோல்வியுடன் 4 புள்ளியும் பெற்றுள்ளன. ஆப்கானிஸ்தான் 1 வெற்றி, 1 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. வங்காள தேசம் தான் மோதிய 2 ஆட்டத்திலும் தோல்வி அடைந்தது.
இன்னும் 4 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. இலங்கை– ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. 4–ந்தேதி பாகிஸ்தான்– வங்காளதேசம், 5–ந்தேதி இந்தியா– ஆப்கானிஸ்தான், 6–ந்தேதி இலங்கை– வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.
புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இந்திய அணி கடைசி ஆட்டத்தில் ஆப்கானிஸ் தானை போனஸ் புள்ளியுடன் வெற்றி பெற வேண்டும். அப்படி நிகழ்ந்தால் 9 புள்ளியை எட்டும்.
அதே நேரத்தில் பாகிஸ்தான் கடைசி ஆட்டத்தில் வங்காளதேசத்திடம் தோற்க வேண்டும். இரு அணிகளும் தலா 9 புள்ளி பெற்றால் ரன்ரேட் கணக்கிடப்பட்டு ஒரு அணி இறுதி போட்டிக்கு முன்னேறும்.
அதே நேரத்தில் இலங்கை எஞ்சிய 2ஆட்டத்திலும் வென்று முன்னிலை பெற வேண்டும்.
No comments: