பிற மொழிப் படங்களில் சாதனை படைத்த தமிழ் நடிகர்
தமிழ் நடிகரான ராஜீவ், கன்னடத்தில் 35 படங்களிலும், தெலுங்கில் 15 படங்களிலும் நடித்து சாதனை படைத்தார்.
"ரயில் பயணங்களில்'' (1981) படத்தின் மூலம் நடிகரான ராஜீவ், 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவற்றில் தமிழ்ப்படங்கள் 100. கன்னடம் 35; தெலுங்கு 15; மலையாளம் 5.
கன்னடப்பட உலகின் சூப்பர் ஸ்டார் ராஜ்குமார், "ஜென்மத ஜோடி'' என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்தார். அதில் வில்லனாக நடித்த ராஜீவ், சிறந்த வில்லன் நடிகருக்கான பரிசு பெற்றார்.
தமிழில் வெளியான "சிறைச்சாலை'', "அரசன்'', "அரண்'' ஆகிய படங்களில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு `டப்பிங்' குரல் கொடுத்தார்.
"பாரதி'' படத்தில், பாரதியாராக நடித்த சாயாஜி ஷிண்டேக்கு குரல் கொடுத்தவர் ராஜீவ்தான். 40 பேர்களின் குரல்களை `டெஸ்ட்' செய்து, ராஜீவின் குரலை தேர்வு செய்தனர்.
பாரதியாருக்கு உள்ள கம்பீரத்துடன் குரல் கொடுத்தார், ராஜீவ். அந்த ஆண்டு, சிறந்த டப்பிங் கலைஞருக்கான தமிழக அரசின் விருதையும் பெற்றார்.
சத்துணவு திட்டத்துக்கு நிதி திரட்ட கங்கை அமரனுடன் சேர்ந்து பல ஊர்களில் ராஜீவ் இசை நிகழ்ச்சிகள் நடத்தினார். அந்த இசை நிகழ்ச்சிகளில் பாடல்களும் பாடினார்.
இதைப் பாராட்டி, எம்.ஜி.ஆர். மோதிரம் பரிசு கொடுத்தார்.
சென்னை தொலைக்காட்சியில், சிவாஜி பிலிம்சின் "மீண்டும் கவுரவம்'' என்ற தொலைக்காட்சித் தொடரை நடத்தியது. இதில் சிவாஜிகணேசன், பிரபு ஆகியோருடன் ராஜீவ் நடித்தார்.
சிவாஜி நடித்த ஒரே டெலிவிஷன் தொடர் இதுதான்.
ஒரு பிறந்த நாளின்போது, நண்பர்களை சந்தித்து இனிப்பு வழங்க ராஜீவ் வெளியே போயிருந்தார். அப்போது அவருடைய தந்தைக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு, இறந்து விட்டார். வீடு திரும்பிய ராஜீவ், தந்தையின் உடலைக் கண்டு கதறித் துடித்தார்.
இந்த சம்பவம் நடந்து 40 நாட்களுக்குப்பின், தாயாருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தார், ராஜீவ்.
குணம் அடைவதும், பிறகு மீண்டும் மாரடைப்பு ஏற்படுவதுமாக மொத்தம் வருடம் ஆஸ்பத்திரியில் இருந்தார், ராஜீவின் தாயார். பல லட்சங்கள் செலவழித்தும் பலன் இன்றி, அவர் காலமானார்.
பெற்றோர் மரணத்தால் மனம் உடைந்துபோன ராஜீவ், திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாக காலம் கழித்தார்.
அவருக்கு 3 அண்ணன்கள். அவர்களுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. தம்பி திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதைக் கண்டு, மனம் வருந்தினர். அவர்கள் தொடர்ந்து வற்புறுத்தியதால், திருமணத்துக்கு சம்மதித்தார், ராஜீவ்.
குடும்ப நண்பரின் மகளான ராணியை அவர் மணந்தார்.
இந்தத் தம்பதிகளுக்கு மீனா காமாட்சி என்ற மகளும், கிரண் சூர்யா என்ற மகனும் உள்ளனர்.
திரை உலகில் தன் அனுபவங்கள் பற்றி ராஜீவ் கூறியதாவது:-
"நடிப்பு பயிற்சி பெற்றபோது எங்கள் நடிப்பை எம்.ஜி.ஆர். பார்த்தார். பிறகு அவர் பேசும்போது, "சினிமாவில் முன்னேறுவது என்பது எளிதல்ல. என்னைப்போலவோ, சிவாஜியைப் போலவோ வந்துவிடலாம் என்று கனவு காணாதீர்கள். நாங்கள் எவ்வளவோ கஷ்டங்களை அனுபவித்த பிறகுதான் இவ்வளவு தூரத்துக்கு உயர முடிந்தது. ஏதாவது ஒரு வேலை பார்த்துக் கொண்டு, பட வாய்ப்பு தேடுங்கள். நல்ல நிலைக்கு வரும் வரை வேலையை ராஜினாமா செய்யாதீர்கள்'' என்று அறிவுரை கூறினார்.
கன்னடத்திலும், தெலுங்கிலும் என்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் சிகரம் கே.பாலசந்தருக்கு மிகவும் கடமைப்பட்டு இருக்கிறேன்.
நான் பல படங்களில் வில்லனாக நடித்திருக்கிறேன். என்றாலும், கற்பழிப்பு சீன்களில் நடிக்க நான் ஒப்புக்கொள்வது இல்லை.''
இவ்வாறு ராஜீவ் கூறினார்.
No comments: