சிரஞ்சீவி தம்பி நடிகர் பவன்கல்யாண் புதிய கட்சி தொடங்குகிறார்
ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர முதல்– மந்திரி கிரண்குமார் ரெட்டி பதவியை ராஜினாமா செய்தார். அதோடு காங்கிரசில் இருந்தும் விலகினார்.
இப்போது அவர் புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்து உள்ளார். ராஜமுந்திரியில் வருகிற 12–ந்தேதி புதிய கட்சியின் பெயர், கொடியை கிரண்குமார் ரெட்டி அறிவிக்கிறார்.
கிரண்குமார் ரெட்டியை தொடர்ந்து மத்திய மந்திரி சிரஞ்சீவி தம்பியும் நடிகருமான பவன் கல்யாண் புதிய கட்சி தொடங்க உள்ளார். இன்னும் ஒரு வாரத்தில் ஐதராபாத்தில் நிருபர்கள் மத்தியில் தனது அரசியல் பிரவேசம் குறித்தும் புதிய கட்சி குறித்தும் அறிவிக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளில் அவரது ரசிகர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
நிருபர்களை சந்திப்பதற்காக ஐதராபாத்தில் உள்ள ஹைடெக் விடுதியில் தனி அறை முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. நிருபர்கள் சந்திப்புக்கு தேசிய அளவிலான பத்திரிகை, மற்றும் டெலிவிஷன் நிருபர்களுக்கும் அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.
அனேகமாக வருகிற 12 அல்லது 15–ந்தேதிகளில் பவன் கல்யாண் தனது அரசியல் முடிவை அறிவிப்பார் எனத் தெரிகிறது.
அப்போது ஒரு முதல்வர் எப்படி செயல்பட வேண்டும், மாநிலத்துக்கு அவர் என்ன செய்ய வேண்டும், தனது லட்சியங்கள் போன்றவற்றை விளக்குகிறார்.
அரசியல் விழிப்புணர்வு குறித்து பவன் கல்யாண் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அந்த புத்தகத்தை நிபர்கள் கூட்டத்தில் வெளியிட உள்ளார்.
பவன் கல்யாண் தங்கள் கட்சியில் சேர்க்க ஆம் ஆத்மி கட்சி, லோக் சத்தா கட்சி தூதுவிட்டு உள்ளது. என்றாலும் அவர் புதிய கட்சி தொடங்குவார் என்றே அவரது ஆதரவாளர்கள் கூறினார்கள்.
இதுகுறித்து பிரபல சினிமா தயாரிப்பாளர் அஸ்வினிதத் கூறும்போது, பவன் கல்யாண் புதிய கட்சி தொடங்க உள்ளார். அதோடு தேர்தலிலும் அக்கட்சி போட்டியிட உள்ளது. 9 எம்.பி. தொகுதியிலும், 40 சட்டசபை தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்படவார்கள் என்றார்.
பவன் கல்யாண் ஏற்கனவே தனது அண்ணன் சிரஞ்சீவி தொடங்கிய பிரஜா ராஜ்யம் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்த போதிலும் அக்கட்சி உள்பட எந்த கட்சியையும் சாராமல் தனித்து செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments: