Header Ads

கழுத்தை அறுத்து கர்ப்பிணி கொலை நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கொன்றதாக கணவன் வாக்குமூலம்

சென்னை, மார்ச் 6: நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கர்ப்பிணி மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்ததாக கைதான கணவன் வாக்குமூலம் அளித்து உள்ளார். நெல்லை மாவட்டம், மஞ்சள்நீர்காயலை சேர்ந்தவர் ஜெயபாலன் (30). இவருக்கும் ஆறுமுகநேரியை சேர்ந்த சுமதி (26) என்பவருக்கும் ஒன்றரை ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. கடந்த 6 மாதத்துக்கு முன்பு செங்குன்றம் அடுத்த மொண்டியம்மன் நகர் வஉசி தெருவில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் வாடகைக்கு குடியேறினர்.அதே வீட்டின் கீழ் தளத்தில் இயங்கும் சேமியா விற்பனை ஏஜென்சியில் ஜெயபாலன் வேலைக்கு சேர்ந்தார். சுமதி தற்போது 3 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில், கடந்த 14ம் தேதி சுமதி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார். அவரது நகை மற்றும் வீட்டில் உள்ள பணம் எதுவும் கொள்ளை போகவில்லை.

இது தொடர்பாக, செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். ஜெயபாலன் மற்றும் அவரது உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் ஜெயபாலன் கூறிய தகவல்களால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில், மனைவியின் நடத்தையில் எனக்கு சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், அவர் கர்ப்பமானார். எனவே, ஆத்திரம் அடைந்து சுமதியை கழுத்து அறுத்து கொலை செய்தேன் என ஜெயபாலன் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதைதொடர்ந்து போலீசார், நேற்று முன்தினம் ஜெயபாலனை கைது செய்தனர். அவரை பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். கர்ப்பிணி கொலையில் 18 நாள் துரித விசாரணை நடத்தி, கொலையாளியை கைது செய்த போலீசாரை, காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

No comments:

Powered by Blogger.