எனக்கு யாருமே போட்டி இல்லை!”
மீகாமன்’ என்றொரு ஆக்ஷன் த்ரில்லர், 'புறம்போக்கு’ என்றொரு சின்சியர் சினிமா. அட... கலந்துகட்டி வெரைட்டி விருந்து வைக்கிறார் ஆர்யா!
''இந்த வருஷமும் என்னை 'லவ்வர் பாய்’னு விகடன்ல சொல்லிட்டீங்க. ரொம்ப தேங்க்ஸ். ஆனா, ஹீரோயின் பின்னாடி சுத்துறது, பிக்கப் பண்றதுனு எனக்கே போர் அடிக்குது. அதான் அடுத்த சேப்டருக்குப் போயிட்டேன். 'மீகாமன்’ முழுக்கவே ஆக்ஷன் த்ரில்லர். 'தடையறத் தாக்க’-ல அசத்தின மகிழ் திருமேனி, இதில் இன்னும் ஃபோர்ஸா ஸ்க்ரீன் ப்ளே பண்ணியிருக்கார். படத்தோட முதல் சீன்ல இருந்து கடைசி சீன் வரைக்கும் 'ஏன் இப்படி நடக்குது?’, 'அடுத்து என்ன நடக்கப்போகுது?’- ரெண்டு கேள்விகளும் உங்களைத் துரத்திட்டே இருக்கும்!''
''பொதுவா தன் பட ஹீரோக்கள் மூலமா சமூகத்துக்கு மெசேஜ் சொல்வார் ஜனநாதன். அவர் இயக்கும் 'புறம்போக்கு’ படத்துக்கு எப்படி உங்களை டியூன் பண்ணிக்கிட்டீங்க?''
''ஏன் பாஸ் நாங்களும் சமூகத்துக்கு மெசேஜ் சொல்லக் கூடாதா? ஜனநாதன் படங்களில் ஒவ்வொரு வசனமும் பவர்ஃபுல்லா இருக்கும். 'புறம்போக்கு’ சீரியஸ் மெசேஜ் சொல்ற படம்தான். ஆனா, அதை செம ஜாலியா சொல்லியிருப்பார். ஒரு படம், ரசிகர்களை சந்தோஷப்படுத்தணும்; இல்லைன்னா ஓர் அனுபவம் கொடுக்கணும்; அதுவும் இல்லைன்னா ஒரு மெசேஜ் சொல்லணும். 'பொறம்போக்கு’ ரசிகர்களுக்கு நல்ல மெசேஜ் சொல்ற சந்தோஷமான அனுபவம்!''
''எம்.ஜி.ஆர்.-சிவாஜி, ரஜினி-கமல், விஜய்-அஜித், விஜய் சேதுபதி-சிவகார்த்திகேயன்... இப்படி ஜோடி ஜோடியாத்தான் இங்கே ஸ்கோர் பண்ணுவாங்க. ஆனா, உங்களுக்கு அப்படி யாரும் 'இனிய எதிரி’ இல்லையே... ஏன்?''
''அப்படி காம்பினேஷன் அமைஞ்சதெல்லாம் அந்தந்தக் காலகட்டங்கள்ல ஒரே நேரத்தில் சினிமா ரிலீஸ் ஆனதால் உண்டான டிரெண்ட். நடிகர்களுக்குள்ள போட்டி இருக்காது. ஆனா, அவங்கவங்க ரசிகர்கள் இன்னொரு நடிகரைப் போட்டியாப் பார்த்திருப்பாங்க. யோசிச்சா, எனக்குப் போட்டினு யாருமே இல்லை. ஒரே ரூட்ல இல்லாம வெரைட்டியாப் படம் பண்றவன் நான். அதனால் ஹீரோக்கள் என்னைப் போட்டியா நினைக்கிறது இல்லை. 'இவனை யாரோட கம்பேர் பண்றது?’னு ரசிகர்களும் யாரையும் எனக்குப் போட்டியா ஃபிக்ஸ் பண்ணலைனு நினைக்கிறேன். இப்படிப் போட்டி இல்லாம இருக்கிறது சந்தோஷம்தானே. ஆர்யா ஹேப்பி அண்ணாச்சி!''
''சரி கல்யாணம் எப்போ... காதல் கல்யாணம்தானே?''
''பிரதர்! என் கல்யாணமே கேள்விக்குறியா இருக்கு. இதுல காதலாவது கத்திரிக்காயாவது! என் கேரக்டருக்கு லவ் மேரேஜ்தான் செட் ஆகும். ஆனா, எனக்கு ஏத்த ட்ரீம் கேர்ளை நான் இன்னும் சந்திக்கவே இல்லை. சும்மா விளையாட்டுக்குச் சொல்லலை. எனக்குக் காதல் வந்தா அதை மூடி மறைக்கவா போறேன். கிசுகிசுவெல்லாம் கிளம்புறதுக்கு முன்னாடியே, 'இதுதான் என் ஆளு’னு முதல் ஆளா நானே சொல்வேன். இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணுவோம்!''
''எப்பவும் 'பிளேபாய்’ ஆர்யா’னு மீடியால வந்துட்டே இருப்பதால், உங்க பெர்சனல் ரிலேஷன்களில் எதுவும் பாதிப்பு இருக்கா?''
''பாதிப்புனு எதைச் சொல்ல முடியும்? அஃபிஷியலா ஹீரோவோ ஹீரோயினோ கிசுகிசு வரலைன்னாதான் இங்கே பிரச்னை. கிசுகிசு வரலைன்னா, நாம லைம் லைட்ல இல்லைனு அர்த்தம். வீட்ல இருக்கிறவங்களுக்கு என்னைப் பத்தி தெரியும். என் ஃப்ரெண்ட்ஸ் என்னை நல்லாப் புரிஞ்சுவெச்சிருக்காங்க. அதனால, பெர்சனலா எனக்கு எந்தக் கவலையும் இல்லை. இப்பல்லாம் 'கிசுகிசு நல்லது’ன்னே தோண ஆரம்பிச்சிருச்சு!''
''எல்லா விஷயத்திலும் சீரியஸா இல்லாம ஜாலியாவே சுத்திட்டு இருக்கிறது போர் அடிக்கலையா?''
''நான் ரொம்ப சீரியஸா இருக்கேன்னு காட்ட, ஹார்ட் அட்டாக்னு படுத்துக்கவா முடியும்? எதை வெச்சு அப்படிச் சொல்றாங்கனு தெரியலை. சந்தோஷமா இருக்கிறது வேற... விளையாட்டுத்தனமா இருக்கிறது வேற. நான் சந்தோஷமா இருக்கேன். பொது இடங்களில் ஃப்ரெண்ட்ஸைக் கிண்டல் பண்ணிச் சிரிச்சுப் பேசினா தப்பா? ஒரு நடிகன்னா, எப்பவும் முகத்தை இறுக்கமாவே வெச்சிருக்கணுமா என்ன? நான் என் கமிட்மென்ட்களில், என் நடிப்பில் எவ்வளவு சீரியஸான ஆளுனு என்கூட வேலை பார்த்த இயக்குநர்களுக்குத் தெரியும்; தயாரிப்பாளர்களுக்குத் தெரியும். அவங்க ஏதாவது குறை சொன்னா, நான் பதில் சொல்லலாம். மத்தவங்களுக்கு எப்படிப் பதில் சொல்றது? கொஞ்சம் ஜாலியா விடுங்க பாஸ்!''
No comments: