தேனிலவின்போது பாலியல் உறவுக்கு மனைவி மறுப்பது கொடுமை ஆகாது
மும்பை,:தேனிலவுக்கு சென்ற இடத்தில் பாலியல் உறவு வைத்து கொள்ள மனைவி மறுப்பது கணவனுக்கு இழைக்கப்படும் கொடுமையாக கருத முடியாது. இதை காரணம் காட்டி விவாகரத்து வழங்க கூடாது என்று மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.மும்பையை சேர்ந்த வாலிபர் ஒருவர் மும்பை குடும்ப நீதிமன்றத்தில் கடந்த 2012ம் ஆண்டு, டிசம்பரில் தொடர்ந்த வழக்கில், ‘தேனிலவின் போது பாலியல் உறவுக்கு மனைவி மறுத்துவிட்டார். அது கொடுமையானது. மேலும், வேலைக்கு செல்ல வேண்டாம் என்று நான் கூறியும் பேன்ட், சட்டை அணிந்து கொண்டு வெளியில் சென்றார். எனவே, அவரிடம் இருந்து எனக்கு விவாகரத்து வழங்க வேண்டும்Õ என்று கோரினார். அதை ஏற்று விவாகரத்து வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் 29 வயதான அந்த மனைவி மேல்முறையீடு செய்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தாகில்ரமணி, தேஷ்முக் அடங்கிய பெஞ்ச் அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:தேனிலவின் போது பாலியல் உறவுக்கு மனைவி மறுப்பது கொடுமையான செயலாக கருத முடியாது. அதேபோல் திருமணம் முடிந்த 45 நாட்களுக்கு பிறகு நகருக்கு வெளியில் இருக்கும் அலுவலகத்துக்கு பேன்ட், சட்டை அணிந்து மனைவி வேலைக்கு செல்வதும், கணவனை கொடுமைப்படுத்துவதாக கருத முடியாது. திருமணம் என்பது கணவன் மனைவி இடையிலான அன்பை அடிப்படையாக கொண்டது. எல்லா குடும்பத்திலும் சிறுசிறு சண்டைகள் நாள்தோறும் நடக்கின்றன. இதுபோன்ற காரணங்களை கணவனை கொடுமைப்படுத்துவதாக கருத முடியாது. குடும்ப நல நீதிமன்றம் வழங்கிய விவாகரத்து தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறினர்.
No comments: