Header Ads

புழல் அருகே பயங்கரம் மொபட்டில் சென்ற பெண் இன்ஜினியர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை...

சென்னை : புழல் அருகே மொபட்டில் சென்ற பெண் இன்ஜினியர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். அருகில் உயிருக்கு போராடியபடி கிடந்த வாலிபர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பட்டப்பகலில் நடந்துள்ள இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புழல் அடுத்த சூரப் பட்டு- புத்தாகரம் சர்வீஸ் சாலையில் நேற்று மதியம் ஒரு மொபட் எரிந்த நிலையில் கிடந்தது. அருகில் கருகிய நிலையில் ஒரு இளம்பெண் சடலம் கிடந்தது. கால்வாயில் ஒரு வாலிபர் கருகிய நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.இதை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மற்றும் புழல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து, அந்த வாலிபரை ஆம்புலன்சில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தகவலறிந்து மாதவரம் துணை கமிஷனர் விமலா, உதவி கமிஷனர் மன்னர் மன்னன், புழல் இன்ஸ்பெக்டர் தேவராஜ் ஆகியோர் வந்து பார்வையிட்டனர். சடலத்தை பிரதேச பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல் வருமாறு: 
ஆவடி காமராஜர் நகர் நேதாஜி தெருவை சேர்ந்தவர் நீலகண்டன். ஓய்வு பெற்ற ஐசிஎப் ஊழியர். இவரது மகள் சுகன்யா (20). இன்ஜினியரிங் படித்து, அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.நேற்று நீலகண்டன், மகன் விஜய் ஆனந்துடன் ஈரோட்டில் உறவினர் இல்ல திருமணத்துக்கு சென்றுவிட்டார். தாயிடம், தனக்கு தெரிந்த அனாதை ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளை பார்த்துவிட்டு வருவதாக கூறிவிட்டு சுகன்யா புறப்பட்டுள்ளார் என்று தெரிய வந்துள்ளது.

அவருடன் கருகிய வாலிபர் யார் என்று இதுவரை தெரியவில்லை. சம்பவம் நடந்த இடத்தில் புதிய கேனில் பெட்ரோலும், லைட்டரும் கிடந்தது. அவற்றை போலீசார் கைப்பற்றினர். காதல் விவகாரத்தில் சுகன்யாவை அந்த வாலிபர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தாரா அல்லது தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக்கொண்டு சுகன்யாவை கட்டிப்பிடித்தாரா என்ற கோணங்களில் விசாரணை நடக்கிறது. தடயவியல் நிபுணர்களும் சோதனை நடத்தினர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Powered by Blogger.