இலங்கைக்கு எதிரான அமெரிக்க யோசனையில் திருத்தம்
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான மூன்று நாடுகள் இணைந்து மனித உரிமை பேரவையில் கொண்டுவரவுள்ள யோசனையில், இலங்கையில் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் தொடர்பான விடயமும் உள்ளடக்கப்பட வேண்டும் என சர்வதேச அறங்கூறுநர் ஆணைக்குழு முன்மொழிந்த திருத்த யோசனையை அதில் உள்ளடக்க சகல நாடுகளும் இணக்கம் வெளியிட்டுள்ளன.
கடந்த 7 ம் திகதி அமெரிக்காவின் யோசனை கலந்துரையாடலுக்கு எடுக்கப்பட்ட போதே மேற்படி இணக்கம் வெளியிடப்பட்டது.
இதன் போது யோசனையின் முதல் பகுதி மட்டுமே கலந்துரையாடலுக்கு எடுக்கப்பட்டதுடன், பொறிமுறை மற்றும் பரிந்துரைகள் அடங்கிய மற்றைய பகுதி நாளைய தினம் கலந்துரையாடலுக்கு எடுத்து கொள்ளப்பட உள்ளது.
பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய மட்டுமே இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக விவாதித்ததுடன் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் வெனிசூலா அரசாங்கத்திற்கு ஆதரவாக விவாதித்தன.
இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் சரியாகவும் நேரடியாகவும் கருத்துக்களை முன்வைத்த பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் அரசாங்கத்திற்கு ஆதரவான கருத்துக்களை வலுவிழக்க செய்தன. அந்த நாடுகளின் பிரதிநிதிகள் சிறந்த முறையில் விடயங்களை ஆராய்ந்து கருத்துக்களை வெளியிட்டனர்.
பத்திரிகைகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாக கொண்டு இலங்கையில் நடத்தப்படும் தேர்தல்கள் மோசடியானது என யோசனையில் உள்ளடக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என எகிப்து பிரதிநிதி கூறியதற்கு பதிலளித்த பிரித்தானிய பிரதிநிதி, பொதுநலவாய தேர்தல் கண்காணிப்பாளர்களின் அறிக்கையில் அடிப்படையில் அந்த விடயம் உள்ளடக்கப்பட்டதாக தெரிவித்தார்.
அங்கு கருத்து வெளியிட்ட ஆர்ஜன்டீனா பிரதிநிதி, இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும் எனவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நீதி அத்தியவசியம் என தமது நாடு நம்புவதாக குறிப்பிட்டார்.
இலங்கைக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட பாகிஸ்தான் பிரிநிதி, இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எந்த இடையூறுகளும் ஏற்படவில்லை எனவும் அந்நிய மதத் தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பான விடயத்தை யோசனையில் இருந்து நீக்க வேண்டும் என தெரிவித்தார்.
அப்போது பிரித்தானிய பிரதிநிதி, புள்ளி விபரங்களுடன் விடயங்களை முன்வைத்ததுடன் உறுப்பு நாடுகள் பிரித்தானியாவின் கருத்துக்களை ஏற்றுக்கொண்டன.
ஆசிய நாடுகளான கொரியா, ஜப்பான் மற்றும் தாய்லாந்து நாடுகள் நடுநிலையாக கருத்துக்களை வெளியிட்டதுடன் இந்த நாடுகள் யோசனை கொண்டு வரும் போது வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது தவிர்க்கலாம் என கருதப்படுகிறது.
இதேவேளை மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் கருத்துக்கள் எதனையும் முன்வைக்கவில்லை. இந்தியாவும் கருத்துக்கள் எதனையும் முன்வைக்காதது இங்கு முக்கிய அம்சமாகும்.
அத்துடன் யோசனை முன்வைக்கும் மூன்று நாடுகளின் பிரதிநிதிகள் தலைமை ஆசனத்தில் அமர்ந்திருந்தமையும் இங்கு முக்கிய அம்சமாக இருந்தது. இதற்கு முன்னர் அப்படி நடந்ததில்லை. அமெரிக்க பிரதிநிதி போலா ஷேபருடன் மொரீசியஸ் மற்றும் மொண்டிநீக்ரோ ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் அமர்ந்திருந்தனர்.
இலங்கை சம்பந்தமான யோசனை கலந்துரையாடலுக்கு எடுக்கப்பட்ட போது உலக நாடுகள் மிகவும் அக்கறையுடன் காணப்பட்டதுடன் 200 நாடுகளின் பிரதிநிதிகள் அதில் கலந்து கொண்டனர்.
No comments: