Header Ads

வல்லினம் - சினிமா விமர்சனம்

ண்பனுக்காக விட்ட விளையாட்டை நட்புக்காகத் தொட்டால்... அதுவே வல்லினம்!
நகுலன், திருச்சி கல்லூரியில் படிக்கும் கூடைப்பந்தாட்ட வீரர். ஒருமுறை மேட்ச் ஆடும்போது நகுலன் தூக்கிப்போடும் பந்தால், நண்பன் கிருஷ்ணா இறந்துவிடுகிறார். மனம் மாற சென்னைக்கு இடம் மாறுகிறார். சென்னைக் கல்லூரியில் நகுலனுக்கு அம்ஜத் நண்பனாகிறார். 'கிரிக்கெட்டே கிரேட்’ என்று நினைக்கும் கல்லூரி சேர்மனுக்கும் அம்ஜத்துக்கும் சண்டை நடக்கிறது. 'மேட்ச்ல ஜெயிச்சுக் காட்டுங்கடா’ என்று சேர்மன் சவால்விட, நண்பனுக்காக களம் இறங்குகிறார் நகுலன். சவாலில் நண்பர்கள் ஜெயித்தார்களா? என்பது மீதிக் கதை.
கூடைப்பந்து விளையாட்டை வைத்து தமிழில் வந்த முதல் படம் இதுவாகத்தான் இருக்கும். நட்பை மையப்படுத்தி, அதில் விளையாட்டைப் புகுத்தி விறுவிறுப்பாகப் படம் கொடுத்திருக்கிறார் இயக்குநர் அறிவழகன். போட்டியைத் தடுத்து நிறுத்த விளையாட்டுத் துறை அமைச்சர் எடுக்கும் முடிவுகள் சின்னப்புள்ளத்தனம் என்றாலும், க்ளைமாக்ஸில் இவர்களை எதிர்த்து ஆடும் அந்தப் புது அணி... டைரக்டர் டச்!

நாயகன் நகுலன் கவனிக்க வைக்கிறார். நட்பு, காதல், கோபம், வேகம், விவேகம் எல்லாம் இருக்கிற இளமையான ஹீரோ கேரக்டருக்கு பக்கா ஃபிட். நண்பனுக்காக பேஸ்கட்பாலை ஷூட் செய்யும்போது வருகிற ஆக்ரோஷம்... அட்டகாசம். ஹீரோவைக் காதலிக்கிற சராசரி ஹீரோயினாக மிருதுளா. ஹீரோயினுக்கான எந்த அடையாளமோ, நடிப்போ இல்லாமல் காற்றைப் போல கடக்கிறார்.
நண்பன் கிருஷ்ணா, திருச்சி கோச் ஆதி, சென்னை கோச் அதுல் குல்கர்னி, கோடீஸ்வரர் ஜெயப்பிரகாஷ், பிரின்சிபல் ஒய்.ஜி.மகேந்திரா ஆகியோர் கொஞ்ச நேரம் வந்தாலும் மனதில் நிற்கிறார்கள். ஒரு ஒன் டு ஒன் மேட்ச்சில் எதிரியைக் கைக்கொடுத்துத் தூக்கிவிடும் நகுலனைப் பார்த்து, 'அவன் ஒரு அண்ணா ஹஜாரேடா’ என்று கலாய்ப்பது, கெத்தாக கிரவுண்டில் இறங்கி, 'நான் ஒரு அவுட்ஸ்டேண்டிங் பிளேயர்’ என்று ரிட்டன் வருவது... என சீரியஸ் கதையில் ஆங்காங்கே சிரிக்கவைப்பது... நண்டு ஜெகன்தான்.
ராகிங், சரக்கு சலம்பல், சீனியர்-ஜூனியர் சண்டை என வரும் முன்பாதி கல்லூரி காட்சிகள்... 'பாத்தாச்சு பாத்தாச்சு’ டைப். நகுலன் சீனியருடன் மேட்ச்சில் மோதும்போது, ஜெயிக்க வேண்டும் என பந்தை ஷூட் செய்யாமல், 'சேர்ந்து ஜெயிக்கலாம் வா’ என சொல்லும் இடம்.. ரசனை ஏரியா. கிரிக்கெட்டால் இந்தியாவில் எத்தனை விளையாட்டுகள் காணாமலே போய்விட்டன என்பதைச் சொல்ல நினைத்திருக்கிறார்கள். ஆனால், அதற்காக அவர்கள் எடுத்துவைக்கும் வாதமும் வார்த்தைகளும் மெல்லினம் வகையறா.

தமன் இசையில் பின்னணி இசை மட்டும் பாஸ் பண்ணுகிறது. பாஸ்கரனின் கேமரா மைதானங்களில் 'லைவ் ரிலே’ எஃபெக்ட் கொடுக்கிறது.
விளையாட்டுப் படங்களுக்கே என்று இருக்கும் ஃபார்மட்டில் ஒரு சினிமா. ஆனாலும் சுவாரஸ்யம் கொடுத்தவிதத்தில் பாக்கெட் பண்ணலாம்!

No comments:

Powered by Blogger.