காதல் சொல்ல ஆசை..விமர்சனம்
நடிகர் : அஷோக்நடிகை : வாஸ்னாஇயக்குனர் : தமிழ் சீனுஇசை : லேக்காஓளிப்பதிவு : ஜேக்கப் ரத்தினராஜ்
நாயகன் அசோக்கின் அப்பா, தாத்தா என எல்லோரும் நேர்மையான போலீஸ் அதிகாரிகளாக இருந்தவர்கள். அப்படி தலைமுறை தலைமறையாக போலீஸ் குடும்பமாக வாழும் இவர்களது குடும்பத்தில் அசோக்கையும் போலீஸ் அதிகாரியாக ஆக்க வேண்டும் என்பது அவரது அப்பாவின் ஆசை. ஆனால், அசோக்குக்கு இதில் விருப்பமில்லை.
எனவே, நண்பர்களுடன் தனியாக தங்கி வேலை தேடி வருகிறார். இந்நிலையில் ஒருநாள் நாயகியின் செல்போன் அசோக்கிடம் கிடைக்கிறது. அதை நாயகியிடம் கொடுக்கச் செல்லும்போது நாயகி வேலை செய்யும் கம்பெனியிலேயே இவருக்கும் வேலை கிடைத்துவிடுகிறது. நாயகியை ஒருதலையாக காதலிக்கவும் தொடங்குகிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்கத் தொடங்கி விடுகின்றனர்.
இந்நிலையில், இவர்கள் வேலை பார்க்கும் கம்பெனி முதலாளியின் மகனான மது ஒருநாள் நாயகியை பார்க்கிறான். இறந்து போன தன்னுடைய காதலிபோல் இருக்கும் அவள்மீது காதல் கொள்கிறான். அங்கேயே நல்ல நண்பர்களாக பழகும் மதுவும், அசோக்குக்கும் இதில் போட்டி ஏற்படுகிறது. இந்தநிலையில் யாருடைய காதல் வெற்றி பெற்றது? யாருடன் நாயகி சேர்ந்தாள் என்பதே மீதிக்கதை.
படத்தில் இடம்பெறும் பெரும்பாலான காட்சிகள் ஏற்கெனவே பல படங்களில் பார்த்து சலித்துப் போனவைதான். அதனால் முதல் காட்சியிலிருந்து படம் சுவாரஸ்யம் இல்லாமல் நகர்கிறது. நாயகன் அசோக் இயல்பாக நடிக்க முயற்சி செய்துள்ளார். ஏற்கெனவே பல படங்களில் நடித்து அனுபவம் இருந்தாலும், இந்த படத்தில் ஏனோ கோட்டை விட்டுவிட்டார். நாயகி வாஸ்னா முதல் பாதி முழுக்க புடவையில் வந்து அனைவரையும் கவர்கிறார். இருந்தாலும் மனதை கவரும்படியான காட்சிகள் இல்லாதது வருத்தமே. இதில் மது மட்டும் விதிவிலக்கு. அவருடைய கதாபாத்திரம் ரசிக்க வைக்கிறது. நடிப்பும் சிறப்பாக இருக்கிறது.
இது எந்த மாதிரியான கதை என்பதை சொல்ல இயக்குனர் தடுமாறியிருக்கிறார். படம் பார்க்கும் நம்மையும் குழப்பியிருக்கிறார். வழக்கமான காதல் கதையையே, வழக்கமான காட்சிகளாக உருவாக்கி போரடிக்க வைத்திருக்கிறார். லேக்காவின் இசையில் பாடல்கள் தெளிவில்லை. பின்னணி இசையிலும் தடுமாற்றம்தான். ஒளிப்பதிவு ஓரளவுக்கு நன்றாக இருக்கிறது.
மொத்தத்தில் ‘காதல் சொல்ல ஆசை’ பார்க்க ஆசை இல்லை.
No comments: