Header Ads

மதுமிதாவுக்கு மட்டும் மெசேஜ் அனுப்புவேன்!''

ஒல்லியான தேகம், பரிதாபம் காட்டும் கண்கள், நிறையவே சந்திரபாபு சாயல்... இதுதான் காமெடி நடிகர் சாம்ஸின் அடையாளம். கோலிவுட் மினிமம் கியாரண்டிப் படங்களின் காமெடி நடிகராகிவிட்டவருடன்  ஜாலியாகப் பேசியதில்...

''சாம்ஸோட சினிமா என்ட்ரியைக் கொஞ்சம்  சொல்லுங்க...''

''திருச்சிதாங்க நம்ம ஊர். சினிமாவில் ஹீரோ ஆகணும்னு நினைச்சுக்கிட்டு வண்டி ஏறலை, அதே சமயம் காமெடியன் ஆகணும்னும் சபதம் எடுக்கலை. வேலை விஷயமா சென்னைக்கு வந்தவன் நான். வீட்ல, ஸ்கூல்ல, காலேஜ்லனு எல்லா இடத்திலேயும் கழண்ட கபாலியாத் திரிஞ்சுக்கிட்டு இருந்தேன். 'நீயெல்லாம் இங்கே இருக்கவேண்டிய ஆளே இல்ல. தெரியுமா?’னு ஓவர் ரியாக்‌ஷன் டயலாக் பேசுற சில பேரால, எனக்கும் சினிமா ஆசை வந்தது. முக்கியமா ஜெயப்பிரகாஷ்னு ஒரு நண்பன், 'நீயெல்லாம் சினிமாவுக்குப் போனா சூப்பரா வருவேடா’னு சொல்லுவான். அவன் பேச்சைக் கேட்டுதான் சினிமாவுல என்ட்ரியைப் போடலாம்னு முடிவு பண்ணினேன். தட்டுத்தடுமாறி, கிரேஸி மோகன் சாரோட நாடகக் குழுவுல சேர்ந்துட்டேன். அவர்தான் என்னோட குரு, அவருடைய நாடகக் கம்பெனிதான் என்னோட குருகுலம். 'சாமிநாதன்’கிற பேரை 'சாமா’னு கூப்பிடுவார். அப்புறம் 2002-ல சினிமாவில் அறிமுகமானேன். சினிமாவுக்கு வந்ததும் கொஞ்சம் ஸ்டைலா 'சாம்ஸ்’னு வெச்சுக்கிட்டேன். குருநாதர் செல்லமாக் கூப்பிட்ட பேரை ஏன் மாத்தினேன்னு யோசிக்கிறீங்களா? நாலைஞ்சு தடவை உச்சரிச்சுப் பார்த்தீங்கனா, உங்களுக்கே புரியும்.''

''2002-ல வந்த படங்கள்ல உங்க முகத்தைப் பார்த்ததா ஞாபகம் இல்லையே பாஸ்?''

''அதுக்காக... சூடம் அடிச்சா சத்தியம் பண்ண முடியும்? உங்களுக்கு மட்டுமில்லீங்க, என் பொண்டாட்டிகிட்டேயே 'பாரு... பாரு... ஓரத்துல நிக்கிறது யாருன்னு தெரியுதா?’னு நான் நடிச்ச படங்களுக்குக் கூட்டிட்டுப் போய் காட்டுவேன். ஆனா, அவ கவனிச்சுப் பார்க்கிறதுக்குள்ள என்னோட முகம் ஸ்கிரீன்ல இருக்காது. 'இதுக்குப் பேருதான் நடிப்பா?’னு கழுவி ஊத்துற மாதிரி பார்ப்பாங்க. இதுவரைக்கும் நாலைஞ்சு காமெடி நடிகர்களோட நடிச்சுட்டு இருந்த நான், முதல்முறையா 'பூலோகம்’ படத்தில் மெயின் காமெடியனா வர்றேன்.''

''சந்திரபாபு சாயல்ல இருக்கிறது ப்ளஸ்ஸா? மைனஸா?''

''நல்லவேளை... நீங்க சந்திரபாபுவோட சொந்தக்காரர்தானேன்னு கேட்கப்போறீங்களோனு நினைச்சுட்டேன். ஏன்னா, பலபேர் என்னை சந்திரபாபுவோட மகன்னே முடிவு பண்ணிட்டாங்க. இதாவது பரவாயில்ல, ஒரு கலை நிகழ்ச்சிக்குப் போனேன். அங்கே ஒருத்தர் 'உங்க அப்பா படத்தை முதல் நாளே பார்த்துடுவேன் தம்பி’னு கட்டிப்பிடிச்சார்.''

''பஞ்ச் பேசுற காமெடியன்களைப் பார்த்தா உங்களுக்கெல்லாம் கோபம் வரலையா?''

''எந்திருச்சு நிற்கப்போறவனை மண்டையில கொட்டி, மறுபடியும் உட்கார வெச்சுடுவீங்க போல? ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதம். அதுல நான் ஒரு விதம்... எல்லோரையும் மக்கள் ரசிச்சுக்கிட்டுதான் இருக்காங்க.  எனக்கான காலகட்டமும் கண்டிப்பா வரும். இன்னொரு விஷயம்.  'மிஸ்டர் பீன்’ மாதிரி வித்தியாசமாத் தெரியணும்னு ஆசைப்படுற காமெடியன் நான். கிசுகிசுவுக்கா பிளான் பண்றீங்க? சிக்க மாட்டோம்ல.''

''சினிமாவில் உங்களுக்கு இருக்கிற கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் யார் யாரு?''

''நானெல்லாம் ஷூட்டிங் முடிஞ்சதும் வீட்டுக்குப் போய் ஓடி ஒளிஞ்சிக்கிற ஆளு. இதுல ஃப்ரெண்ட்ஸே பிடிக்க முடியாது. கேர்ள் ஃப்ரெண்டை எங்கே தேடுறது? என்கூட ரெண்டு படத்துல நடிச்சதனால் காமெடி நடிகை மதுமிதாவுக்கு மட்டும் அவங்க நடிப்பைப் பாராட்டி அப்பப்போ மெசேஜ் அனுப்புவேன்.''

No comments:

Powered by Blogger.