Header Ads

நளினியை பரோலில் விட முடியாது: சிறைத்துறை அதிகாரி ஐகோர்ட்டில் பதில் மனு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார்.

அந்த மனுவில் தன்னுடைய தந்தை ஓய்வு பெற்ற சப்– இன்ஸ்பெக்டர் சங்கர நாராயணன் 95 வயதில் மரணப் படுக்கையில் படுத்து இருப்பதாகவும் அவரது இறுதி காலத்தில் அவருடன் இருக்க விரும்புவதாகவும் அதற்காக தனக்கு ஒரு மாதம் விடுப்பு (பரோல்) வழங்க சிறைத்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், பி.என்.பிரகாஷ் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் கருப்பண்ணன் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:–

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள அம்பலவாணபுரத்தில் மனுதாரர் நளினியின் தந்தை சங்கர நாராயணன் வசித்து வருகிறார். அவர் ஆரோக்கியமான சூழ்நிலையில் உள்ளார்.

விக்கிரமசிங்கபுரம் மலைப்பகுதி என்பதாலும் பாராளுமன்றத்துக்கு தேர்தல் வருவதாலும் நளினி அங்கு வசிப்பது சாதகமான சூழ்நிலை இல்லை என்றும் அவ்வாறு அவர் அங்கு வசிக்கும்போது தேர்தல் பயனுக்காக அரசியல் தலைவர்கள் அவரை சந்திக்கலாம் என்றும் அவரால் வேறு விதமாக பிரச்சினைகள் உருவாகலாம் என்றும் விக்கிரமசிங்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆட்சேபனை தெரிவித்து அறிக்கை அனுப்பி உள்ளார்.

மேலும் நளினிக்கு 1 மாதம் விடுப்பு (பரோல்) வழங்க ஆட்சேபனை தெரிவித்து சிறைத்துறை நன்னடத்தை அதிகாரியும் அறிக்கை தாக்கல் செய்து உள்ளார்.

தந்தையின் உடல் நலத்தை காரணமாக கூறி ஒரு மாதம் விடுப்பு கோர ஆயுள் தண்டனை கைதி நளினிக்கு உரிமை இல்லை. அவர் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையில் தண்டனை பெற்று உள்ளவர். எனவே அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வருகிற 17–ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

No comments:

Powered by Blogger.