இலங்கைத் தமிழர் என்பதால் பாலுமகேந்திரா! குடியுரிமை இன்றி தீயுடன் சங்கமம்
ஈழத்தின் மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பில் பிறந்து தென்னிந்திய சினிமாவில் தனி முத்திரை பதித்து மறைந்த திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திராவின் இறுதிச்சடங்கு இன்று வெள்ளிக்கிழமை பெருந்திரளான இயக்குனர்கள், கலைஞர்கள், ரசிகர்களின் கண்ணீர்க் கடலுக்கு மத்தியில் இடம்பெற்றது.
74 வயதான பாலுமகேந்திராவுக்கு 13.02.2014 வியாழக்கிழமை மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி காலமானார்.
அவரது உடல் சாலிக்கிராமத்தில் உள்ள அவரது சினிமா பட்டறையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. பாலு மகேந்திராவின் உடலுக்கு ஏராளமான திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தினர்.
இன்று ஏராளமான சினிமாத் துறையினர், பொதுமக்கள் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
குறிப்பாக பழ நெடுமாறன் ஐயா, காசி ஆனந்தன் ஐயா, ஓவியர் வீரசந்தானம் ஐயா ஆகியோர் நேரடியாக வந்து கதறியழுது அஞ்சலி செலுத்தினர்.
பாலுமகேந்திராவின் வளர்ப்பு மகன் என்று சொல்லப்படும் இயக்குனர் பாலா அவரின் கால்மாட்டில் அழுதபடி உட்கார்ந்திருந்தது மிகுந்த துயரமாக இருந்தது.
பாலுமகேந்திராவின் இறுதி ஊர்வலத்தில் பாரதிராஜா, மகேந்திரன், பாலா, அமீர், விக்ரமன் உள்ளிட்ட முன்னணி இயக்குநர்கள், சினிமாத் துறையினர் மற்றும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
சாலி கிராமத்திலிருந்து போரூர் மின் மயானம் வரை உச்சி வெயிலையும் பொருட்படுத்தாமல் கலைஞர்களும், பொதுமக்களும் நீண்ட நெடிய ஊர்வலமாக சென்றது பார்ப்போரின் நெஞ்சை உருக்குவதாக அமைந்திருந்தது.
போரூரில் உள்ள மின் மாயானத்தில் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
வயதானாலும் என்னுடைய மனசு இன்னும் அதே இளமை சுறுசுறுப்புடன்தான் இருக்கிறது என்று அடிக்கடி சொல்லி வந்தவர் பாலுமகேந்திரா.
பாலுமகேந்திரா இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் ‘தலைமுறைகள்’. அத்திரைப்படத்தின் மூலமாக இயக்குநர், ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா தன்னை ஒரு நடிகராகவும் முன்னிறுத்திக் கொண்டார். அது மட்டுமன்றி, முதன் முறையாக பாலுமகேந்திரா டிஜிட்டல் கேமிராவில் ஒளிப்பதிவு செய்த படம் ‘தலைமுறைகள்’. தன்னுடைய இறுதி காலத்திலும் படத்தில் நடித்து, இயக்கி, ஒளிப்பதிவு செய்து, எடிட்டிங் என தனது பட வேலைகள் அனைத்தையும் தானே செய்தார்.
ஈழத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பதால் ஈழ விடுதலைப் போராட்டமும், 2009 ஈழ விடுதலைப் போரில் நடந்த நிகழ்வுகளும் அவரைக் கடுமையாகப் பாதித்திருந்தன. தன் தாய்மண்ணின் மீதான ஏக்கத்தையும் தாய்மொழியின் மீதான பற்றுதலையும் ‘தலைமுறைகள்’ படத்தில் வெளிப்படுத்தவும் செய்திருந்தார்.
‘தலைமுறைகள்’ படத்தின் மூலமாக யாரும் தமிழை மறக்காதீர்கள் என்ற கருத்தை முன்வைத்தார். அப்படத்தில் மரணம் அடையும் போது பேரனை அழைத்து “தமிழை மறந்துடாதீங்கப்பா…! இந்த தாத்தாவையும் மறந்துடாதீங்கப்பா…!” என்பார். அதுவே அவர் தமிழ் திரையுலகிற்கு கூற விரும்பியது எனலாம்.
படத்தின் பத்திரிக்கையாளர் காட்சிக்கு வந்திருந்த பாலு மகேந்திரா, “உண்மையில் கிராமத்தில் தான் தமிழ் இருக்கிறது. தமிழை யாரும் மறக்க கூடாது” என்று கண் கலங்கினார். காட்சி முடிந்தவுடன் பல்வேறு பத்திரிக்கையாளர்கள் அவருடன் இணைந்து புகைப்படம் எடுக்க விரும்பினார்கள். சில நேரம் கழித்து, “ஏம்பா.. நான் சாக மாட்டேன். கவலைப்படாதீங்க.. இன்னும் 5 கதைகள் வைச்சிருக்கேன் இயக்குவதற்கு. ” என்றார். அவர் இயக்குவதாக வைத்திருந்த கதைகள் அனைத்துமே கண்டிப்பாக தமிழுக்காக மட்டுமே இருந்திருக்கும்.
நேற்று முன்தினம் தன்னுடைய உதவியாளர்களை அழைத்து அனைவருடனும் புகைப்படம் எடுத்திருக்கிறார்.
இயக்குநர் பாலா, ராம், வெற்றிமாறன், சீனு ராமசாமி என தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் பலரும் இவரது பட்டறையில் தொழில் கற்றவர்கள் தான். இது வரை பாலாவின் எல்லா படங்களின் இசையையும் வெளியிட்டது பாலு மகேந்திரா தான்.
இன்று பாலுமகேந்திரா மறைந்தாலும், ஒளிப்பதிவில் அவர் செய்த சாதனைகள் தமிழ் சினிமா சரித்திரத்தில் மறையாது. பல்வேறு ஒளிப்பதிவாளர்கள் தற்போது இருந்தாலும், இருக்கிற வெளிச்சத்தை வைத்து சிறப்பாக ஒளிப்பதிவு செய்ய தெரிந்த ஒரே ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திரா. தற்போது, ஒரு குழந்தைக்கும் தீவிரவாதி ஒருவருக்கும் இடையிலான நட்பை அடிப்படையாக வைத்து தனது புதிய திரைப்படத்தின் திரைக்கதையையும் அவர் எழுதி வந்தார்.
கடந்த 40 வருடங்களுக்கு மேலாக தென்னிந்திய சினிமாவை வளர்த்து, ஏராளமான இயக்குனர்களையும், கலைஞர்களையும் உருவாக்கித் தந்து, எண்ணற்ற விருதுகளையும் பெற்ற பாலுமகேந்திரா கடைசி வரைக்கும் நாடற்றவனாக வாழ்ந்து இறந்தது தான் சோகத்தின் உச்சம். இந்தியாவில் எவ்வளவு நாள்தான் வாழ்ந்தாலும் ஈழத் தமிழ் மக்களுக்கு குடியுரிமை கொடுப்பதை தொடர்ந்து மறுத்து வரும் இந்திய ஆட்சியாளர்கள் ஈழத் தமிழர்களை எப்படி நடாத்துகிறார்கள், நடாத்துவார்கள் என்பதற்கு பாலுமகேந்திராவே ஒரு சிறந்த உதாரணம்.
ஈழத்துக் கவிஞர் வ.ஐ.செ ஜெயபாலனினால் எழுதப்பட்டு படிக்கப்பட்ட கவிதை,
தென்னகத்து அழகியலை திரையில் உயிர்பித்த
எங்கள் ஈழத்துப் பொக்கிசத்தை
ஆழப் புதைத்தாலும் நீராய் விதைத்தாலும்
ஐந்திணையும் தோப்பாகி அழககழகாய் பூமலர்ந்து
பறவைகளாய் பாடி பசும்தரையாய் பாய்விரிக்கும்.




No comments: