விஜயகாந்தை மட்டும் தனியாக இழுக்க முயற்சி: காங்கிரசுடன் கூட்டணி சேர தி.மு.க.வில் கடும் எதிர்ப்பு
தமிழ் நாட்டில் பாராளு மன்ற தேர்தலில் கட்சிகளின் நிலையால் பல முனை போட்டி ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இதற்கு முன் நடந்த பாராளுமன்ற தேர்தல்களில் தேசிய கட்சிகளுடன் மாநில கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டதால் இருமுனை போட்டியே நிலவி வந்தது.
இந்த முறை காங்கிரசுடனோ, பாரதீய ஜனதாவுடனோ அ.தி.மு.க., தி.மு.க. போன்ற பெரிய கட்சிகள் கூட்டணி சேராமல் தனி அணியாக தேர்தலை சந்திக்கிறது.
தி.மு.க. அணியில் விடுதலை சிறுத்தை, புதிய தமிழகம் உள்ளிட்ட சிறிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஆனால் இன்னும் ஏதாவது ஒரு பெரிய கட்சி இடம் பெற்றால் தான் கூட்டணி வலுப்பெறும் என்று தி.மு.க.வில் ஒரு சாரார் கருதுகிறார்கள்.
பாரதீய ஜனதா கூட்டணியில் ம.தி.மு.க. சேர்ந்து விட்ட நிலையில் பா.ம.க.வும் கூட்டணி பேச்சு வார்த்தையை முடித்து விட்டது. தே.மு.தி.க. மட்டுமே தனது நிலையை அறிவிக்காமல் இழுத்தடித்து வருகிறது. அதே சமயம் மற்ற அணிகளிடமும் பேச்சு நடத்தி வருவது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தே.மு.தி.க. எந்தப் பக்கம் சாயும் என்ற இழுபறி ஏற்பட்டுள்ளது.
நேற்று டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங்கை விஜயகாந்த் சந்தித்து பேசியதுடன் டெல்லியிலேயே முகாமிட்டு காங்கிரஸ் தலைவர்களுடன் ரகசிய பேச்சு நடத்தி வருவதாக கூறுப்படுகிறது. எனவே விஜயகாந்த் காங்கிரஸ் அணியில் தான் இடம் பெறுவார் என்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது.
ஒரு வேளை விஜயகாந்த் காங்கிரசுடன் சேராவிட்டால் தங்கள் பக்கம் இழுக்கலாம் என்று பாரதீய ஜனதா காத்திருக்கிறது. தொடர்ந்து தே.மு.தி.க.வுடன் பாரதீய ஜனதாவும் தொடர்பில் இருக்கிறது.
விஜயகாந்த் காங்கிரசுடன் கூட்டணி அமைத்தால் அந்த இரு கட்சிகளையும் தங்கள் அணியில் இணைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் கூட்டணி பலம் பெறும் என்று தி.மு.க. கணக்கு போட்டது. ஆனால் இரு கட்சிகளையும் சேர்க்க தி.மு.க.வில் இரு வேறு விதமாக எதிர்ப்பு கிளம்பியது.
பழைய கூட்டணி நண்பன் என்ற முறையிலும், தமிழக கட்சிகள் எதுவும் தன்னிடம் பேச்சு நடத்த முன்வராத நிலையில் தி.மு.க.வுடன் கைகோர்க்க காங்கிரஸ் எப்போதும் தயாராகவே இருக்கிறது. தி.மு.க.வில் ஒரு பிரிவினர் காங்கிரஸ் கூட்டணியையும் விரும்புகிறார்கள்.
ஆனால் காங்கிரசுடன் கூட்டணி வேண்டவே வேண்டாம் என்று ஒரு தரப்பினர் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். விஜயகாந்த் மட்டும் தனியாக வந்தால் கூட்டணியில் சேர்க்கலாம் என்று தெரிவிக்கிறார்கள். அதையே தான் கட்சி தலைமையும் ஏற்றுக் கொண்டு இருப்பதாக தெரிகிறது.
எனவே தான் ஆரம்பம் முதல் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று தி.மு.க.தலைவர் கருணாநிதி கூறிவந்தார். நேற்றும் அதை மறைமுகமாக தெரிவித்ததுடன் விஜயகாந்த்துக்கு மட்டும் பகிரங்கமாக அழைப்பு விடுத்தார்.
அதே சமயம் காங்கிரஸ் மறைமுகமாக நெருக்கடி கொடுத்து தி.மு.க.வை கூட்டணிக்கு நிர்ப்பந்தித்து வருகிறது. இதனால் தான் தி.மு.க.வில் உள்ள சில தலைவர்கள் காங்கிரசுடன் தொடர்பில் இருந்து வருகிறார்கள்.
தே.மு.தி.க.வை தி.மு.க. விரும்புவதால் அந்த கட்சியை முதலில் கூட்டணிக்குள் கொண்டு வந்து விட்டால் அதன் மூலமாக தி.மு.க. கூட்டணிக்குள் நுழைந்து விடலாம் என்று காங்கிரஸ் திட்டம் போட்டுள்ளது. இதற்காகத் தான் தே.மு.தி.க.வை டெல்லிக்கு வரவைத்து சந்திப்பு நாடகங்களை அரங்கேற்றியது.
எனவே தி.மு.க. கூட்டணிக்கு விஜயகாந்த் மட்டும் தனியாக வருவாரா? காங்கிரசுடன் சேர்ந்து வருவாரா? என்ற எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இவை இரண்டும் ஏற்படா விட்டால் விஜயகாந்த்தும் காங்கிரசும் தனி அணியாக போட்டியிடும் சூழ்நிலையும் ஏற்படலாம்.
தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் இருப்பதால் கூட்டணி தொடர்பாக கட்சிகளின் நிலையில் எந்த நேரத்திலும் திடீர் மாற்றம் ஏற்படலாம் அப்போது எதிர்பாராத புதிய கூட்டணி கூட உருவாகலாம் என்ற நிலை இருப்பதால் கட்சிகள் முடிவு எடுப்பதை காலம் தாழ்த்தி வருகின்றன.

No comments: