Header Ads

பெங்களூரு வந்த நான்டேட் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ; 26 பேர் பலி- 3 தமிழர்கள் உயிரிழப்பு

அனந்தபூர்: ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. பலர் காயம் அடைந்துள்ளனர். மகராஷ்டிரா மாநிலம் நான்டேட் பகுதியில் இருந்து நேற்று இரவு பெங்களூர் புறப்பட்ட நான்டேட் எக்ஸ்பிரஸ் ரயில் அதிகாலை 3.45 மணியளவில் ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே உள்ள சென்று கொண்டிருந்தது. கொத்தசேவூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது மின் கசிவு ஏற்பட்டு தீ பிடித்தது. ரயிலின் வேகம் அதிகமாக இருக்கவே தீ மளமளவென பற்றியது. அதிகாலை நேரம் என்பதால் உறக்கத்தில் இருந்த பயணிகள் பலர் எரிந்து சாம்பலாயினர். மூச்சுத் திணறியும் பலர் பலியாகினர். இதுவரை 26 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த 12க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள அனந்தபூர் மற்றும் தர்மாவரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 5-க்கும்மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நிகழ்ந்த பகுதியில் மீட்பு நடவடிக்கை துரிதப்படுத்தும் விதமாக ரயில் நிர்வாக அதிகாரிகள் மற்றும் போலீசார் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். ரயிலின் குளிர்சாதனப் பெட்டியில் ஏறபட்ட மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு ரயில்வே அமைச்சகம் தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது. விபத்து குறித்து விசாரணை நடத்தவும் ரயில்வே நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ரயில் தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்தவர் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் சுதா, லீலா, ராமநாதன் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. அதேபோல ரயிலில் பயணம் செய்த குரோம்பேட்டையைச் சேர்ந்த நடேஷ், குழந்தை தனுஸ்ரீ ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. தீக்காயமடைந்த இருவருக்கும் அனந்தபூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. ரயிலில் பயணித்த தனியார் வங்கி ஊழியரான நடேஷின் மனைவி விஜிதா பற்றி தகவல் இல்லை. குரோம்பேட்டையில் நியூ காலனி 4-வது மெயின் ரோட்டில் வசித்து வருகிறார் நடேஷ். நான்டேட் எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று காலை நடைபெற்ற தீ விபத்து அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். ரயிலில் பயணம் செய்தவர்கள் பற்றி தெரிந்து கொள்ள ரயில்வே நிர்வாகம் உதவி தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது ஹைதராபாத்: 040 - 23310680 பெங்களூரு: 080 - 22354108, 22259271, 080 2235 4108, 080 2225 9271, 080 2215 6554 உடனடி செய்திகளுக்கு எப்போதும் ஒன் இந்தியாவுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.

No comments:

Powered by Blogger.