கொழும்பில் இருந்து சென்னைக்கு ரூ.50 லட்சம் தங்கம் கடத்தி வந்த 4 இலங்கை வாலிபர்கள் பிடிபட்டனர்
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்துக்கு கொழும்பில் இருந்து பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள், இலங்கையில் இருந்து சென்னை வந்த 3 விமானங்களை தீவிரமாக கண்காணித்தனர்.
அந்த விமானங்களில் சுற்றுலா விசாவில் வந்த 4 இலங்கை வாலிபர்களை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள், இலங்கை கொழும்பு நகரை சேர்ந்த அப்துல் அலி(வயது 40), யாழ்பாணத்தை சேர்ந்த விக்னேஷ்(29), கண்டியை சேர்ந்த ஷாஜகான்(27), முகமது யூசுப்(35) என தெரியவந்தது.
அவர்களிடம் இருந்த சூட்கேஸ்களை அதிகாரிகள் பிரித்து சோதனை செய்தனர். ஆனால் 4 பேரிடமும் எந்தவித பொருட்களும் இல்லை. ஆனால் அவர்களின் நடையில் சந்தேகம் வந்ததால் 4 பேரையும் தனியறைக்கு அழைத்துச்சென்று விமான நிலைய மருத்துவ குழுவினர் உதவியுடன் சோதனை செய்தனர். அப்போது 4 பேரின் ஆசன வாய் பகுதியில் தலா 400 கிராம் தங்க கட்டிகள் மறைத்து வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர்.
ரூ.50 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 600 கிராம் தங்க கட்டிகளை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். ரூ.5 ஆயிரத்துக்காக ஆசைப்பட்டு 4 பேரும் தங்க கட்டிகளை கொழும்பில் இருந்து கடத்தி வந்து உள்ளனர். அதை அவர்கள் யாருக்காக சென்னைக்கு கடத்தி வந்தனர். இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments: