இவர்கள் விமானத்தை கடத்த வந்த தீவிரவாதிகள் அல்ல !
‘விமானத்தை கடத்த முயன்ற தீவிரவாதிகள்’ எனக் குற்றம்சாட்டப்பட்ட இருவர், “இவர்கள் தீவிரவாதிகள் அல்ல, இரட்டை முட்டாள்கள்” (Pair of idiots not terrorists) என சக பயணிகள் சாட்சியமளித்ததால், விடுவிக்கப்பட்டுள்ளார்கள். பிரிட்டிஷ் நீதிமன்றம், “இவர்கள்மீது எந்த குற்றத்தையும் சுமத்த முடியாது” என்று கூறிவிட்டதில், இருவரும் வாயெல்லாம் பல்லாக சிரித்துக்கொண்டு, வீடு போய் சேர்ந்தார்கள். பிரிட்டிஷ் அதிகாரிகளால் போடப்பட்ட இந்த ‘தீவிரவாதி வழக்கு’ இப்படி சிரிப்பாக முடிந்துவிட்டாலும், இதன் ஆரம்பம் மிக சீரியசாகவே இருந்தது! (ஏகப்பட்ட செலவு வேறு!!)
கடந்த மே, 24-ம் தேதி, பாகிஸ்தானில் இருந்து சென்ற பயணிகள் விமானம் ஒன்று பிரிட்டிஷ் வான்பகுதியில் திசைதிருப்பப்பட்டு, லண்டனுக்கு வெளியேயுள்ள ஒதுக்குப்புற ரன்வே ஒன்றில் தரையிறக்கப்பட்டது. இந்த விமானத்தை, பிரிட்டிஷ் விமானப்படையின் போர் விமானங்கள் இருபுறமும் பறந்து சென்று தரையிறங்க வைத்துவிட்டு சென்றன.பயணிகள் விமானத்துக்கு வானில் அச்சுறுத்தல் ஏற்பட்டால்தான், விமானப்படை போர் விமானங்கள் எஸ்கார்ட் செய்ய அனுப்பப்படுவது வழக்கம். இதனால், இந்தச் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.பாகிஸ்தான் ஏர்லைன்ஸூக்கு சொந்தமான போயிங் 777 ரக விமானம் அது. தட இலக்கம் PK709. 297 பயணிகளுடனும் 11 விமான சிப்பந்திகளுடனும் பாகிஸ்தானின் லாகூர் நகரில் இருந்து பிரிட்டனின் மான்செஸ்டர் நோக்கி சென்றுகொண்டிருந்தது.
மான்செஸ்டரில் அதிகளவு பாகிஸ்தானியர்கள் வசிப்பதால், பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் அறிமுகம் செய்துள்ள நேரடி விமானசேவை இது. விமானம் வழமையான பாதையில் செல்லாமல், சிறிது நேரம் பிரிட்டிஷ் வான்பகுதிக்குள் வராமல், வெளியே வட்டமிட்டுக் கொண்டிருந்தது.விவகாரம் என்னவென்றால், விமானத்துக்குள் இருந்த இரு பயணிகள் விமானத்தை அழித்து விடுவதாக கூறினர். அதையடுத்து பாகிஸ்தான் விமானி, அந்த தகவலை பிரிட்டிஷ் ஏர்-ட்ராபிக் கன்ட்ரோல் டவருக்கு தெரிவித்தார்.அவர்கள் கொடுத்த ஆலோசனை, “விமானம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளதால், பிரிட்டனுக்குள் வரவேண்டாம். பிரிட்டிஷ் வான் பகுதிக்கு வெளியே சுற்றிக்கொண்டு இருங்கள். நாங்கள் ஆளனுப்புகிறோம்”
இதையடுத்து, விஷயம் பிரிட்டிஷ் விமானப்படைக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தமது போர் விமானங்கள் இரண்டை அனுப்பினார்கள். அந்த விமானங்கள், பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானத்தின் இருபுறமும் பாதுகாப்பு கொடுத்தபடி, பிரிட்டனுக்குள் அழைத்துச் சென்றன. விமான நடமாட்டம் அதிகமுள்ள மான்செஸ்டருக்கு அழைத்துச் செல்லாமல், லண்டன் புறநகரப் பகுதியில் உள்ள ஸ்டான்ஸ்டட் விமான நிலையத்தை நோக்கி பாக். விமானத்தை எஸ்கார்ட் செய்து அங்கே தரையிறங்க வைத்தன பிரிட்டிஷ் போர் விமானங்கள். (வரைபடம்-5)பயணிகள் அனைவரும் ஒதுக்குப்புறமான இடம் ஒன்றில் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டனர். “விமானத்தை அழித்து விடுவோம் என்று கூறிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
“விமானத்தை அழிப்போம்” என்று சும்மா வாயால் சொன்னால், அதற்காக இவ்வளவு பெரிய ஆபரேஷன் (ஏகப்பட்ட செலவாகியிருக்கும்) செய்திருக்க மாட்டார்கள். இதில் வேறு ஏதோ விவகாரம் உள்ளது என்று மீடியாக்களில் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.கைது செய்யப்பட்ட இருவரின் பெயர்களும், தயாப் சுபானி (30), மொஹமெட் சஃப்தார் (42).விமானத்தில் என்ன நடந்தது? இவர்கள் இருவரும் விமானத்தின் காக்பிட்டுக்கு போய் பார்க்க விரும்பி அனுமதி கேட்டார்கள். பாதுகாப்பு காரணங்களால் இப்போதெல்லாம் யாரையும் அனுமதிப்பதில்லை. இதையடுத்து விமானப் பணிப்பெண்களுக்கும் இவர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், இவர்கள் ‘விளையாட்டுத்தனமான கோபத்துடன்’ “இந்த விமானமே அழிந்துவிடும்” என்றிருக்கிறார்கள். அதுதான், அவர்கள் செய்த முட்டாள்தனம்! இந்த விவகாரம் விமானிக்கு தெரியப்படுத்தப்பட, அவர் ஏர் ட்ராபிக் கன்ட்ரோலுக்கு தெரிவிக்க, உடனே, பிரிட்டிஷ் போர் விமானங்கள் சீறிக்கொண்டு வந்துவிட்டன, பாகிஸ்தான் விமானத்தை எஸ்கார்ட் செய்வதற்கு!
வழக்கு நேற்று கோர்ட்டுக்கு வந்தது:
அப்போது சாட்சியமளித்த சக பயணிகள், “விமானத்தில் இவர்கள் இருவரையும் பார்த்தபோது எமக்கு அச்சம் ஏற்படவில்லை. முட்டாள்களாக உள்ளார்களே என சிரிப்புதான் வந்தது” என்றனர்.சாட்சியமளித்த விமானப் பணிப்பெண்கள், “தீவிரவாதிகளா? இவர்களா? இவர்களை பார்த்தால் அப்படியொரு நினைப்பே எமக்கு ஏற்படவில்லை” என்றனர். (இந்த பெண்கள் தீவிரவாதிகளை நேரில் பார்த்திருக்கிறார்கள் யுவர் ஆனர்!)விமானத்தின் கேப்டன் நதீம் சுஃபி என்பவரும் சாட்சியமளித்தார். “தகவல் எனக்கு சொல்லப்பட்டவுடன் சீரியசான விஷயமாக கருதி ஏர்-ட்ராஃபிக் கன்ட்ரோலுக்கு தெரிவித்தேன். விமானத்தை திசை திருப்ப உத்தரவு வந்தது.
ஆனால் அதன்பின் நான் இவர்களை பார்த்துவிட்டு, “சேச்சே இவர்கள் தீவிரவாதிகள் இல்லை போலிருக்கிறது” என ஏர்-ட்ராஃபிக் கன்ட்ரோலுக்கு தெரிவித்தேன். இருப்பினும் அவர்களோ, தமது முடிவை மாற்ற மறுத்து விட்டார்கள். வேறு வழியில்லாமல் ஸ்டான்ஸ்டட் ஏர்போர்ட்டில் இறங்கினோம்” என்றார் அவர்.
கோர்ட்டில், இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். பிரிட்டிஷ் பத்திரிகையில் “Pair of idiots are CLEARED” என்று தலைப்பு செய்தி வெளியிட்டுள்ளார்கள் ! Idiots இவர்களாக இருக்கலாம். ஆனால், பிரிட்டிஷ் ஏர்-ட்ராபிக் கன்ட்ரோலர்கள் மகா இடியட்ஸ் போலிருக்கிறதே!
No comments: