இலங்கையில் நடந்த போர்க் குற்றம் குறித்து சர்வதேச விசாரணை தேவை: தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தல்
இலங்கையில் இறுதிக்கட்ட போரின்போது போர்க்குற்றங்கள் நடந்திருப்பது தொடர்பாக சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்த உலக நாடுகளை வலியுறுத்தப் போவதாகவும், ஜெனிவாவில் நடைபெற உள்ள மனித உரிமை தொடர்பான மாநாட்டிலும் இதை வலியுறுத்தப் போவதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஜெனிவாவில் வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள ஐ.நா மனித உரிமை ஆணையக்குழு கூட்டத் தொடரில் கலந்து கொள்ளும் சர்வதேச நாடுகளை சேர்ந்த தலைவர்களுடன், இலங்கையில் தற்போது நிலவும் சூழல் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்துக்கூறும் என அதன் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா நகரில் சமீபத்தில் நடந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டத்தில் இலங்கை தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு அழுத்தம் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஜெனிவா மனித உரிமை ஆணையக்குழு கூட்டத் தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே கலந்து கொண்டு இது குறித்து முறையிட்டிருந்தாலும், இம்முறை இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணையை துரிதப்படுத்துமாறு மிகத்தீவிரமாக வலியுறுத்தப்படும் என சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments: