பாகிஸ்தான் நடிகைக்கு உடல் ரீதியாக இம்சை: "பிக் பாஸ்" போட்டியாளர் நடிகர் அர்மான் கோலி ஜாமினில் விடுவிப்பு
பிரபல இந்தி தொலைக்காட்சி சேனல் ஒன்றில் "பிக் பாஸ்" என்ற தொடர் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பாகிஸ்தானின் பிரபல கவர்ச்சி நடிகை சோபியா ஹ்யாட் மும்பை வந்துள்ளார்.
"பிக் பாஸ்" நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடைபெற்று வரும் மும்பை லோனாவாலா பகுதியில் உள்ள சொகுசு பங்களாவில் சோபியா ஹ்யாட் தங்கியிருந்த போது அந்நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற பிரபல பாலிவுட் நடிகர் அர்மான் கோலியும் அதே பங்களாவில் தங்கியிருந்தார்.
அப்போது "ஏதோ" விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அர்மான் கோலியை உடனடியாக அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என நிகழ்ச்சி தயாரிப்பாளர்களை சோபியா ஹ்யாட் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில், அர்மான் கோலி தன்னை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதாகவும், உடல் ரீதியாக "இம்சித்த"தாகவும் சோபியா ஹ்யாட் மும்பை சாண்டா குருஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து, நடிகர் அர்மான் கோலியை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். அவர் மீது 5 குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
நேற்று பிற்பகல் வரை அவரை லாக்-அப்பில் வைத்து போலீசார் விசாரித்தனர். அர்மான் கோலியின் தந்தை மற்றும் நண்பர் ஒருவர் அளித்த ஜாமினின் பேரில் போலீசார் அவரை விடுதலை செய்தனர்.
No comments: