Header Ads

டி20 உலக கோப்பையில் விளையாட இந்திய அணி 14ம் தேதி வங்கதேசம் செல்கிறது

மும்பை : ஐசிசி டி20 உலக கோப்பை போட்டித் தொடரில் விளையாடுவதற்காக, டோனி தலைமையிலான இந்திய அணி 14ம் தேதி வங்கதேசம் செல்கிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் டி20 உலக கோப்பை தொடர், இம்முறை வங்கதேசத்தில் மார்ச் 16ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது.தகுதிச் சுற்று ஆட்டங்களுக்குப் பிறகு பிரதான சூப்பர் 10 சுற்று 21ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் நடக்கும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானுடன் மோதுகிறது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக, டோனி தலைமையிலான இந்திய அணி நாளை மறுநாள் வங்கதேசம் செல்கிறது.மார்ச் 17ம் தேதி நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணியுடன் மோதும் இந்தியா, அடுத்து 19ம் தேதி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. 

காயம் காரணமாக டோனி ஓய்வெடுத்த நிலையில், கோஹ்லி தலைமையில் ஆசிய கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடிய இந்திய அணி பைனலுக்கு முன்னேற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பியது. தற்போது அவர் முழு உடல்தகுதியுடன் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள நிலையில், 2007ம் ஆண்டுக்குப் பிறகு 2வது முறையாக டி20 உலக கோப்பையை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இந்திய அணி: எம்.எஸ்.டோனி (கேப்டன்), ஷிகார் தவான், ரோகித் ஷர்மா, விராத் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், அஜிங்க்யா ரகானே, ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ஸ்டூவர்ட் பின்னி, அமித் மிஷ்ரா, மோகித் ஷர்மா, வருண் ஆரோன்.

No comments:

Powered by Blogger.