நிமிர்ந்து நில் - சினிமா விமர்சனம்
எந்தக் காரணத்துக்காகவும் லஞ்சம் கொடுக்க மாட்டோம்’ என நிமிர்ந்து நிற்கச் சொல்லும் படம்!
ஆசிரமத்தில் வளர்ந்த சின்சியர் ஜென்டில்மேன் ஜெயம் ரவி, போக்குவரத்து போலீஸிடம் 100 ரூபாய் லஞ்சம் கொடுக்க மறுத்து, 'முதல்வன்’ பாணி சிக்கல்களுக்கு உள்ளாகிறார். ஒருகட்டத்தில் பொறுமை இழந்து அதிரடி ஆபரேஷன் மேற்கொள்கிறார். அதன் மூலம் லஞ்ச லாவண்யத்தில் சிக்கித் திளைக்கும் 147 அரசு அதிகாரிகளை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறார். கிரிமினல் மூளைகொண்ட அந்த 147 பேரும் ரவியைத் திட்டமிட்டு வேட்டையாடுகிறார்கள். நியாயம் ஜெயித்ததா என்பது க்ளைமாக்ஸ்!
'இந்திய’ 'சிட்டிசன்’களை, புரொஃபஸர் 'ரமணா’ போல ஸ்ட்ரிக்ட் ஆகச் செயல்படச் சொல்லும் படம்தான். இதில் சமீப சம்பவங்களையும், சுளீர் சாட்டை வசனங்களையும் திமிறத் திமிற நிரப்பிக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சமுத்திரக்கனி!
இளம்புயலும் பெரும்புயலுமாக அரவிந்த் சிவசாமி, நரசிம்ம ரெட்டி என இரண்டு கெட்டப்களில் ஜெயம் ரவி மிரட்டல். மிஸ்டர் க்ளீன் பையனாகப் பம்முவது, நரசிம்ம ரெட்டியாகத் திமிறுவது எனத் தவிப்பும் விறைப்புமாக ஃப்ரேமுக்கு ஃப்ரேம் நிமிர்ந்து நிற்கிறார்.
துறுதுறு ஸ்கூட்டி ஸ்வீட்டி அமலா பால், டைமிங் காமெடியில் அசத்தும் சூரி, வார்த்தைகள், உடல் மொழியிலேயே கொந்தளிப்பான சூழலை உணர்த்தும் கோபிநாத், நேர்மையான அரசு ஊழியரின் சாம்பிளாக உலாவரும் தம்பி ராமைய்யா, ஜொள்ளுக் குழுவுக்குத் தலைமை தாங்கும் ஞானசம்பந்தன்... என ஒவ்வொரு பாத்திரமும் நச்.
ஜெயம் ரவியின் ஸ்டிங் ஆபரேஷன் நடைமுறைகள், போலி பத்திரத் தயாரிப்பு அறையின் நுழைவாயில், அரசின் தடையைத் தாண்டி சேனல் ஒளிபரப்பை மேற்கொள்ளும் உத்தி என இடைவேளை வரை தீப்பிடித்துப் பறக்கிறது திரைக்கதை. ஆனால், அத்தனை பில்ட்-அப் உழைப்பை, பின்பாதி காமாசோமா காமெடி கலாட்டா 'புஸ்ஸ்ஸ்’ ஆக்கிவிடுகிறதே!
'பெண்ணைவிட ஆணைப் பலமா படைச்சதே, அவளை நாம பாதுகாக்கத்தான். பலவந்தப்படுத்த அல்ல’, 'இலங்கைல கொத்துக் கொத்தாக் கொல்லப்பட்டு ஒரு இனமே அழிஞ்சப்ப, நாம இங்க ஐ.பி.எல். பார்த்துக்கிட்டுல்ல இருந்தோம்’, 'போலிக்கு மட்டும்தான் இந்த நாட்டுல இன்னும் போலி வரலை’, 'நம்ம நாட்ல உண்மையை உண்மைனு நிரூபிக்கவே 20 வருஷம் ஆகுமே!’, 'ஒரு பரபரப்பான செய்தியை இன்னொரு பரபரப்பான செய்தியால மறக்கடிப்பானுங்க. ஆனா, நம்மளை எப்பவும் பதட்டத்துலயே வெச்சிருப்பாங்க!’ என படம் முழுக்க நிமிர்ந்து பார்க்கவைக்கிறது சமுத்திரக்கனியின் வசனம்.
நரசிம்ம ரெட்டி அறிமுகம் சுவாரஸ்யம் என்றாலும், பளிச் திருப்பம் எதையும் ஏற்படுத்தவே இல்லை!
அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிராக இந்தியாவே போராடிக்கொண்டிருக்கும் நிலையில், 'மாற்றத்தை தனி மனிதனில் இருந்து தொடங்குவோம். மாற்றம் தேவைப்படுவது அரசியல்வாதிகளிடம் அல்ல, அரசு அதிகாரிகளிடம்’ என்றெல்லாம் தெளிவான செய்தி சொல்லும் படம், இப்போது மிகவும் அவசியமான ஒரு படைப்பே. ஆனால், பின்பாதி 'டிராமா கலாட்டா’க்களால், 'ஊழலை ஒழிக்கவே முடியாதோ’ என்ற எண்ணம் அல்லவா எழுகிறது!
ஆனாலும், வணிக சமரசத்தையும் தாண்டி 'நாட்டுக்கொரு நல்ல செய்தி’ சொல்லும் ஆர்வத்துக்கு ஒரு சல்யூட்!
No comments: