மலேசிய விமானம் மாயம்: சந்திரிகா சர்மாவின் கணவர் பேட்டி
மலேசிய விமான விபத்து பற்றி இந்திய அரசு எந்த தகவலும் தெரிவிக்காதது வருத்தமளிக்கிறது என்று இந்த விபத்தில் பலியான சென்னையை சேர்ந்த சந்திரிகா சர்மாவின் கணவர் நரேந்திரன் கண்ணீருடன் கூறினார்.
மலேசிய விமானம் கடந்த 7-ந்தேதி விபத்துக்குள்ளானதில் இந்தியாவை சேர்ந்த 5 பேர் உள்பட 239 பேர் பலியானார்கள். சென்னையை சேர்ந்த சந்திரிகா சர்மாவும் பலியானார். இவர் சர்வதேச மீனவ தொழிலாளர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர். இவருடைய கணவர் நரேந்திரன் நேற்று சென்னையில் நிருபர்களுக்கு கண்ணீருடன் பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 4 நாட்கள் என் மனநிலை சரியில்லை. இந்த 4 நாட்கள் எனக்கு மிகவும் கஷ்டமான நாட்கள். இதுவரையில் விமானம் குறித்த எந்த தகவலும் தெரியவில்லை. அந்த விமானம் கடலில் விழுந்ததா? அல்லது வேறு எதுவும் அசம்பாவிதம் ஏற்பட்டதா? என்ற உறுதியான தகவல் இல்லை. சொல்லப்போனால் நம்பக்கூடிய வகையில் எந்த தகவலும் இன்னும் எனக்கு வரவில்லை.
எங்கே போவது? யாரிடம் செல்வது? அடுத்த முயற்சி என்ன செய்வது? என்று ஒன்றும் தெரியவில்லை. சாதாரண மக்களை போலவே நானும் டி.வி. மற்றும் பத்திரிகை செய்திகளை பார்த்து தான் தெரிந்து கொள்கிறேன். இந்த சூழ்நிலையில் இது சம்பந்தப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ், மலேசிய அரசு, குறிப்பாக இந்திய அரசு பெரிய அளவில் எந்த நடவடிக்கையும் எடுக்காதது எனக்கு வருத்தம் அளிக்கிறது.
எனக்கு இவர்கள் எந்த தகவலும் தராதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. நம்முடைய இந்திய அரசு எந்த முறையான உதவியும் இந்த 5 பேரின் குடும்பத்தாருக்கு செய்ததாக நான் கேள்விப்படவில்லை. மலேசியாவில் உள்ள இந்திய துணை தூதர் விவரங்கள் தருகிறார். ஆனால் அவர் தரும் விவரங்கள் அனைத்தும் நாங்கள் டி.வி.யில் பார்த்து தெரிந்து கொள்ளும் விஷயங்களைத் தான் கூறுகிறார். இந்திய அரசு கூடுதல் பொறுப்புடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எத்தனை நாள் தான் இந்த நிலையே நீடிக்கும் என்று தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் விழிக்கும்போது டி.வி., வலைதளம், பத்திரிகையை தான் புதிய தகவல் கிடைத்திருக்கிறதா? என்று முதலில் பார்க்கிறேன். மலேசிய செல்வதற்காக எனக்கு விசா வந்தது. ஆனால் நான் செல்லவில்லை. காரணம் நான் அங்கு சென்று என்ன செய்யப்போகிறேன்.
இங்கு இருந்தாலாவது எனக்கு என் உறவினர்களின் ஆறுதல் இருக்கிறது. அங்கு எனக்கு யார் இருக்கிறார்கள். எனக்கு முழுமையான தகவல் கிடைத்ததும் நான் உடனடியாக செல்வேன். வேதனை என்று கூறும்போது, அது எனக்கு மட்டுமல்ல. என் மகள். எனது அம்மா, என் மனைவியின் (சந்திரிகா சர்மா) அம்மா, சகோதரர்கள் அனைவரும் வேதனையோடு தான் இருக்கிறார்கள். எங்கள் குடும்பத்தின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எங்கள் இல்லத்துக்கு வந்து ஆறுதல் சொல்கிறார்கள். பிரார்த்தனை செய்துவிட்டு செல்கிறார்கள்.
என் கணக்குப்படி இன்றுடன் 5 நாட்கள் முடிந்துவிட்டது. ‘நாளையாவது தகவல் வருமா?’ என்ற ஏக்கத்திலும், மனவேதனையிலும் இருக்கிறேன். இவ்வாறு அவர் கண்ணீருடன் கூறினார். இந்த பேட்டியின்போது சந்திரிகா சர்மா மகள் மேக்னா உடன் இருந்தார்.
No comments: