நைஜீரியாவில் நடைபெற்ற தாக்குதலில் 69 பேர் பலி
நைஜீரியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள கட்சினா மாநிலக் கிராமங்களில் நேற்று நடைபெற்ற தாக்குதல்களில் குறைந்தது 69 பேர் பலியாகியிருக்கக்கூடும் என்று அதிகாரிகளும், நேரில் பார்த்த சாட்சியங்களும் தெரிவித்துள்ளன.
பகல் நேரத்தில் ஊருக்குள் மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் நேரில் கண்டவர்களை எல்லாம் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்தக் கொலையாளிகள் புலானுஸ் என்ற இனவாதக் குழுவினராக இருக்கக்கூடும் என்று நேரில் பார்த்தவர்கள் குறிப்பிட்டனர். ஆனால் இறந்தவர்களிலும் பலர் அதே இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.
போர்னோ மாநிலத்தில் தீவிரமாக செயல்பட்டுவரும் போகோஹாரம் குழுவினரும் இந்தப் பகுதியில் தங்கள் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். கால்நடைகளை விரட்டிச் செல்லுவதற்காக வந்த குழுவினர் என்று இவர்களைப் பற்றி அந்நாட்டுப் பத்திரிகைகள் குறிப்பிட்டுள்ளன.
கட்சினா மாநிலத்தின்ஒரு கிராமத்தில் மட்டும் நடைபெற்ற தாக்குதலில் இறக்க நேரிட்டு புதைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47என்று உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினரான அப்துல்லாஹி அப்பாஸ் மசிகா தெரிவித்தார். அரசாங்கத் திட்டங்கள் சிலவற்றை செயல்படுத்துவதற்காக நைஜீரியா அதிபர் குட்லக் ஜோனாதன் தபோது கட்சினா மாநிலத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அவருக்குப் பாதுகாப்பு கொடுப்பதில் அரசின் பாதுகாப்புப் படைகள் ஈடுபட்டுள்ளதால் இத்தகைய வன்முறைகள் நடந்தபிறகும் பொதுமக்களுக்கு உதவி புரிய பாதுகாப்புப் படையினரை அனுப்பமுடியவில்லை என்று மசிகா குறிப்பிட்டுள்ளார்.
No comments: