Header Ads

விஜயகாந்த் புலியா, எலியா? பேரவையில் காரசார விவாதம்

சென்னை: விஜயகாந்த் புலியா, பூனையா, எலியா என ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரிடையே சட்டப்பேரவையில் நேற்று காரசார விவாதம் நடைபெற்றது.  நிதி நிலை அறிக்கை மீதான பொதுவிவாதத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணி(விளவங்கோடு) நேற்று பேசியதாவது:  இங்கு பேசிய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பிரதமரை மாண்புமிகு பிரதமர் என்று பேசாமல் மன்மோகன் சிங் என்று பேசியது ஏற்கமுடியாது. பிரதமரை மரியாதையுடன் பேசவேண்டும். பாலபாரதி (மார்க்சிஸ்ட்): மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் அப்படி பேசவில்லை. மன்மோகன் சிங் அவர்கள் என்றுதான் பேசினார். மத்திய அரசின் செயல்பாட்டை விமர்சித்து உறுப்பினர் பேசினாரே தவிர மன்மோகன் சிங் மீது விருப்பு, வெறுப்பை வெளிப்படுத்தும் வகையில் பேசவில்லை. அப்போது, குறுக்கிட்டு நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஒரு கருத்தை தெரிவித்தார். 

அந்த கருத்தையும் விஜயதாரணி தெரிவித்த கருத்தையும் நீக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் குணசேகரன் கேட்டுக்கொண்டதை அடுத்து, அதை பேரவை குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் தனபால் தெரிவித்தார். அப்போது விஜயதாரணி தெரிவித்த ஒரு கருத்தை ஆமோதிக்கும் வகையில் தேமுதிகவினர் மேசையை தட்டி ஆரவாரம் செய்தனர்.  அமைச்சர் முனுசாமி: காங்கிரஸ் உறுப்பினர் பேசியதற்கு தேமுதிக உறுப்பினர்கள் தங்களை மறந்து ஆரவாரம் செய்கிறார்கள். அவர்களுக்குள் உடன்பாடு ஏற்பட்டதை இது காட்டுவதாக உள்ளது. அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்: இங்கு நடந்த நிகழ்வின் மூலம் பூனைக்குட்டி வெளியே வந்து கொண்டிருப்பது தெரிகிறது (இந்த கருத்துக்குதேமுதிக உறுப்பினர்கள் தங்களது ஆட்சேபனையை தெரிவித்தனர். கேப்டன் பூனையல்ல புலி என்று சத்தமிட்டனர்).

அமைச்சர் முனுசாமி: சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு பிறகு நடந்த உள்ளாட்சி தேர்தலிலேயே உங்கள் தலைவர் புலியல்ல, பூனையுடன் கூட ஒப்பிட முடியாது. எதிர்க்கட்சி துணை தலைவர் மோகன்ராஜ்: 2004ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போதும், 2006ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலின் போதும் உங்கள் கட்சி பெற்ற வெற்றி எங்களுக்கு தெரியாதா? பாலபாரதி(மார்க்சிஸ்ட்): தூங்கிக் கொண்டிருக்கும் படைக்கு தலைவர் பெயர் கேப்டனா? அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்: உங்கள் தலைவர் பிரதமரை சந்தித்து விட்டு ஜனாதிபதி என்பார், நிதானத்துடன் பேசமாட்டார் (அமைச்சரின் பேச்சுக்கு கடும் ஆட்சேபத்தை தேமுதிக உறுப்பினர்கள் தெரிவித்தனர். இதனால் சபையில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் நிலவியது). 

அமைச்சர் வைத்திலிங்கம்: இறந்தவர் வீட்டுக்கு சென்று இரங்கல் தெரிவிப்பதற்கு பதில் நன்றி தெரிவித்தவர்தான் உங்கள் தலைவர். அமைச்சர் முனுசாமி: எங்கள் கட்சிக்கு கொள்கை உள்ளது. நாங்கள் கொள்கை உள்ள மாற்று கட்சியினருடன் கூட்டணி வைத்துள்ளோம். உங்கள் கட்சிக்கு கொள்கை இல்லை. அதனால் எல்லா இடங்களுக்கும் சென்று வருகிறீர்கள். எதிர்க்கட்சி துணை தலைவர் மோகன்ராஜ்: எங்கள் கட்சி யாருடன் கூட்டணி வைக்கப்போகிறதோ என்ற பயம் உங்களுக்கு. அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்: உங்கள் தலைவரை பூனை என்று கூறியதுகூட தவறு, அவரை எலி என்றுதான் சொல்லவேண்டும். இந்த எலிகளை கண்டு எங்களுக்கு பயம் இல்லை. உங்களுக்குத்தான் பயம். உங்கள் தலைவரிடம் ஏதேனும் கருத்து தெரிவிக்க முயன்றால், அடிவிழுமோ என்ற பயம் உங்களுக்குத்தான். இவ்வாறு விவாதம் நடந்தது.

No comments:

Powered by Blogger.