நித்யானந்தா பிறந்தநாளில் சாமியார் ஆனார் நடிகை ரஞ்சிதா
பெங்களூர் : நடிகை ரஞ்சிதா பெங்களூர் நித்யானந்தா ஆசிரமத்தில் நேற்று சன்னியாசினியாக தீட்சை பெற்றுக்கொண்டார்.சாமியார் நித்யானந்தாவுடன் நெருக்கமாக இருந்ததால் சர்ச்சைக்குள்ளானவர் நடிகை ரஞ்சிதா. இந்த வீடியோ காட்சி தொலைக்காட்சி சானல்களில் ஒளிபரப்பாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து பெங்களூர் அடுத்த பிடதியில் அமைந்துள்ள நித்யானந்தா ஆசிரமத்தை மூட வேண்டும் என்று வலியுறுத்தி கன்னட அமைப்பினர் போராட்டங்களை நடத்தினர். நித்யானந்தாவுக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ளது.
இந்நிலையில் பிடதி ஆசிரமத்தில் நேற்று நித்யானந்தாவின் 37வது பிறந்தநாள் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜனவரி ஒன்றாம்தேதிதான் பிறந்த தினம் என்றபோதிலும், நட்சத்திர அடிப்படையில் நித்யானந்தா ஆசிரமத்தில் நேற்று ‘அவதார‘ தினம் கொண்டாடப்பட்டது.இதில் பங்கேற்க சாமியாரின் திருவண்ணாமலை ஆசிரமம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்தும் அவரது பக்தர்கள் பிடதி ஆசிரமம் வந்திருந்தனர். ரத உற்சவம், பஜனை என பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. விழாவின் ஒருபகுதியாக சிலர் சன்னியாசியாக தீட்சை பெற்றனர்.
அதில் நடிகை ரஞ்சிதாவும் ஒருவர். காவி உடை அணிந்திருந்த அவர் மைக் பிடித்தபடி சன்னியாசியாவதற் கான உறுதிமொழியை வாசித்தார். தீட்சை பெற்ற தும் ஆசிரம வழக்கப்படி பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, ரஞ்சிதாவுக்கு ‘மா ஆனந்தமயி’ என்று பெயரிடப்பட்டது.இதனிடையே நித்யானந்தா பிறந்தநாள் விழாவை படம்பிடிக்க சென்ற கன்னட தொலைக்காட்சி நிருபர்கள் தாக்கப்பட்டதால் ஆசிரம பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இரு கேமராக்கள் பிடுங்கப்பட்டன, பத்திரிகையாளர்கள் மீது ஆசிரமத்திற்குள் இருந்து கற்கள் வீசப்பட்டன.
இதுகுறித்து சம்பவ இடத்தில் இருந்த கன்னட தொலைக்காட்சி நிருபர்கள் கூறுகையில், பிறந்தநாள் விழா நடப்பதால் செய்தி சேகரிக்க வருமாறு ஆசிரம நிர்வாகம் இ-மெயில் மூலம் அழைப்புவிடுத்திருந்தது. எனவேதான் நாங்கள் வந்திருந்தோம். ஆனால் ஆசிரம வளாகத்திற்குள் எங்களை விடமறுத்து விட்டனர். வெளியில் இருந்தபடி படம்பிடிக்கிறோம் என்று கூறினோம். ஆனால் அதையும் ஏற்காமல் வீடியோ காமிராக்களை பிடித்து இழுத்தனர். ஆசிரமத்திற்குள் நித்யானந்தா ரதத்தில் பவனி சென்றுகொண்டிருந்தார். அவரது பின்னால் சென்ற பக்தர்கள் சிலர் எங்கள் மீது கற்களை வீசினர் என்று தெரிவித்தனர்.
ரஞ்சிதா தீட்சைபெற்ற விவகாரம் வெளியானதும், கஸ்தூரி கன்னட வேதிகே என்ற கன்னட அமைப்பினர் ஆசிரமத்தின் வெளியே தர்ணா நடத்தினர். கர்நாடகாவை சேர்ந்த மடாதிபதிகள் பலரும், சர்ச்சைக்குரிய காட்சியில் காணப்பட்ட ரஞ்சிதா தீட்சை பெற்றது தவறு என்று விமர்சனம் செய்துள்ளனர்.
No comments: