100 மணி நேரம் கடந்தது எம்.எச் 370 மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தேடும் பணியில் 10 நாடுகள்
கோலாலம்பூர் : மாயமான மலேசிய விமான தேடுதலில் நேற்று திடீர் திருப்பம் ஏற்பட்டது. தெற்கு சீன கடல் பகுதியில் 3 நாளாக தேடிக் கொண்டிருந்த நிலையில், அதற்கு நேர்எதிராக உள்ள மலாக்கா ஜலசந்தி அருகே விமானம் சென்றதாக கடைசியாக ரேடாரில் பதிவாகியுள்ளது. இதனால், மலாக்கா ஜலசந்தி கடல் பகுதியில் தேடுதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங்குக்கு புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்சை சேர்ந்த போயிங் விமானம் கடந்த 8ம் தேதி அதிகாலை தெற்கு சீன கடல் பகுதியில் மாயமானது. இதில், 4 இந்தியர்கள், கனடாவை சேர்ந்த வம்சாவளி இந்தியர் ஒருவர் உட்பட 227 பயணிகளும், 12 விமான நிறுவன ஊழியர்களும் இருந்தனர். அவர்களின் கதி என்ன ஆனது என்பது தெரியவில்லை. மாயமான விமானத்தை கண்டுபிடிக்க மலேசியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 10 நாடுகள் 34 விமானம் மற்றும் 40 கப்பல்கள் மூலமாக தேடி வருகின்றன.விமானம் புறப்பட்டு 1 மணி நேரத்தில் கோட்டா பாரு நகருக்கு அருகில் ரேடார் தொடர்பு துண்டித் ததாக முதலில் கூறப்பட்டது. இதனால், விமானம் வியட்நாம் வான் பகுதியில் தெற்கு சீன கடலில் விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. அதன்படி, 4வது நாளாக நேற்றும் அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடந்தது.
விமானம் விழுந்ததாக சந்தேகிக்கப்படும் பகுதியிலிருந்து 100 நாட்டிக்கல் மைல் சுற்றுவட்டாரப் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. ஆனால் இதில் விமானம் பற்றிய எந்த துப்பும் கிடைக்கவில்லை.இந்நிலையில், மலேசியாவுக்கும் இந்தோனேஷியாவுக்கும் இடையே உள்ள மலாக்கா ஜலசந்தி பகுதியில், மாயமான விமானம் சென்றதாக கடைசியாக ரேடாரில் பதிவாகியிருப்பதை கண்டுபிடித்திருப்பதாக மலேசிய ராணுவம் நேற்று மாலை தெரிவித்தது. இந்த பகுதி தற்போது தேடிக் கொண்டிருக்கும் இடத்திலிருந்து நேர்எதிராக இருப்பதாகும். கோட்டா பாரு நகரில் வழிமாறிய விமானம் மீண்டும் கோலாலம்பூர் விமான நிலையத்துக்கு திரும்ப முயன்றுள்ளது. ஆனால், இது மலாக்கா ஜலசந்தி அருகே கடலில் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.இதனால், மலாக்கா ஜலசந்தி பகுதியில் அமெரிக்கா, சீனா, வியட்நாம் கப்பல்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. வியாட்நாமின் கம்போடியா நகரின் வனப்பகுதியிலும் விமானத்தை அந்நாட்டு ராணுவம் தேடி வருகிறது.
கடத்தலாக இருக்காது
மாயமான விமானத்தில் திருட்டு பாஸ்போர்ட்டில் பயணம் செய்த 2 பேர் யார் என நேற்று அடையாளம் தெரிந்தது. ஈரானை சேர்ந்த பவுரியா நூர் முகமது மெர்தாத் (19), சையத் முகமது ரிஷா (30) ஆகிய இருவரது புகைப்படங்களை இன்டர்போல் போலீசார் நேற்று வெளியிட்டனர். இருவரும் நண்பர்கள் என கூறி பீஜிங் வழியாக ஜெர்மனி செல்வதற்காக டிராவல் ஏஜென்டிடம் டிக்கெட் வாங்கியுள்ளனர். மலேசிய போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், இவர்களுக்கு எந்த தீவிரவாத கும்பலுடனும் தொடர்பில்லை என தெரியவந்துள்ளது. இதனால், விமானம் கடத்தப்பட்டதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவே என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, சீனாவின் ஜியான் செயற்கைகோள் கட்டுப்பாட்டு மையம், மாயமான விமானத்தை கண்டு பிடிக்க 10 உயர்திறன்செயற்கைக்கோள்களை பயன்படுத்துகிறது. இதில் தெற்கு சீன கடல்பகுதியின் 3 இடங்களில் எண்ணெய் படலங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. மாயமான விமானத்தின் எரிபொருள் கசிவால் இந்த எண்ணெய் படலங்கள் ஏற்பட்டதா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர். எம்.எச் 370 மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மாயமாகி 100 மணி நேரம் கடந்தும் விமானத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் 10 நாடுகள் சேர்ந்து விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன.
No comments: