அமெரிக்காவில் கணவரை எரித்துக் கொன்ற இந்திய பெண்ணுக்கு 20 ஆண்டு சிறை
அமெரிக்காவில் வசித்த கணவரை எரித்துக் கொன்ற இந்திய பெண்ணுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தென் மத்திய டெக்சாஸ் பகுதியின் டிராவிஸ் நகரில் வசித்து வந்த பிமல் பட்டேல்(29) என்பவர் கடந்த 2012 -ம் ஆண்டு பலத்த தீக்காயங்களுடன் சேன் அண்டோனியோ ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
சுமார் 6 மாத காலமாக உயிருக்குப் போராடிய அவர், சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அவரது இளம் மனைவி ஷ்ரியா பட்டேல்(27) பெட்ரோலை ஊற்றி கணவனை எரித்துக் கொன்றது அம்பலமானது.
இந்திய பெண்ணான ஷ்ரியா பட்டேல் லண்டனில் படித்து, பெற்றோருடன் துபாயில் ஆடம்பர வாழ்க்கையில் திளைத்திருந்தார். அப்போது, ஒருவரை காதலித்து வந்த ஷ்ரியா பட்டேல், நாளடைவில் காதலனால் ஒதுக்கப்பட்டார்.
அந்த வேளையில், இந்தியாவில் உள்ள திருமண தகவல் மையத்தின் வாயிலாக அமெரிக்காவில் வாழும் ஒரு மாப்பிள்ளையை தேடிப் பிடித்து ஷ்ரியா பட்டேலுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் தீர்மானித்தனர். ஆரம்பத்தில் இந்த ஏற்பாட்டுக்கு மறுப்பு தெரிவித்த அவர் வேறொரு காரணத்துக்காக திருமணத்துக்கு சம்மதித்தார்.
தன்னை நிராகரித்த முன்னாள் காதலனுக்கு ‘அமெரிக்காவில் எனக்கு வசதியான வாழ்க்கை கிடைத்திருக்கிறது பார்’ என்பதை சவால் விட்டு நிரூபிக்க இந்த திருமணம் உதவியாக இருக்கும் என்று மனக்கணக்கு போட்ட ஷ்ரியா, பிமல் பட்டேலை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் குடியேறினார்.
ஆனால், திருமணத்துக்கு முன்னர் கூறப்பட்டது போல் பிமல் பட்டேல் அவ்வளவு வசதியானவர் அல்ல என்பதை தெரிந்து கொண்ட அவர் நாளடைவில் கணவரை வெறுக்கத் தொடங்கினார்.
இதற்கிடையில், முன்னதாக செய்து வந்த ‘டெலி மார்க்கெட்டிங்’ வேலையில் இருந்தும் பிமல் பட்டேல் நீக்கப்பட்டார். இதனால் வீட்டு வாடகையை கட்டவே சிரமப்பட்ட பிமலின் வாழ்க்கை நிலை ஷ்ரியாவின் ஆடம்பர வாழ்க்கை முறையுடன் ஒத்துப் போகவில்லை.
அது மட்டுமின்றி, முன்னாள் காதலனின் நினைவலைகளும், ஆடம்பர வாழ்க்கை மீதான ஆசையும் ஷ்ரியாவின் மனத்திரையில் பேயாட்டம் போட அரம்பித்தது.
சம்பவத்தன்று, குளியல் அறைக்கு பிமல் பட்டேலை அழைத்து சென்ற ஷ்ரியா, அவர் மீது பெட்ரோலை ஊற்றி எரித்துக் கொன்றுள்ளார் என்பது போதுமான சாட்சியங்களின் மூலம் அமெரிக்காவின் டிராவிஸ் கோர்ட்டில் நிரூபிக்கப்பட்டது.
இவற்றின் அடிப்படையில் ஷ்ரியா பட்டேலுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். ஏற்கனவே, 2 ஆண்டுகளை அவர் விசாரணை கைதியாக சிறையில் கழித்து விட்டதால் இன்னும் 3 ஆண்டுகளுக்கு பிறகு அவர் பரோலில் (விடுமுறை) விடுவிக்கப்படலாம்.
முழு தண்டனை காலத்தையும் நிறைவு செய்த பின்னர் அவர் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படுவார் என தெரிகிறது.
No comments: