ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேரின் தூக்கு தண்டனை ரத்து
புதுடெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற முருகன் உள்ளிட்ட 3 பேர் தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது,முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991 மே மாதம் ஸ்ரீபெரும்புதூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டபோதுமனித வெடி குண்டுக்கு பலியானார். இந்த படுகொலை தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோருக்கு மரண தண்டனையும், மேலும் 24 பேருக்கு பல்வேறு பிரிவுகளில் தண்டனை வழங்கப்பட்டது. நளினியின் தண்டனை பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இதையடுத்து, முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினர். ஆனால், அந்த கருணை மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அவர்கள் தங்களை விடுதலை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு பின்னர் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
வழக்கு தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், சி.கே.சிங் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. வழக்கு கடந்த ஜனவரி 30ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, முருகன், சாந்தன், பேரறிவாளன் சார்பில் மூத்த வக்கீல் ராம்ஜெத்மலானி ஆஜராகி வாதிட் டார். அவர் வாதிடும்போது, ‘பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவருக்கும் 1998 ஜனவரி 28 அன்று தடா நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, 1999 மே 11ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தடா நீதிமன் றம் அளித்த தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, 3 பேரும் ஜனாதிபதிக்கு 2000ம் ஆண்டு ஏப்ரல் 26ல் கருணை மனு தாக்கல் செய்தனர். கருணை மனுக்கள் 11 ஆண்டுகளுக்கும் மேலாகக் கிடப்பில் போடப்பட்டு 2011ம் ஆகஸ்டு 12ல் நிராகரிக்கப்பட்டு, 2011 செப்டம்பர் 9ல் மரண தண்டனை நிறைவேற்ற ஆணை இடப்பட்டது. கருணை மனுவை பரிசீலிக்க 11 ஆண்டுகளுக்கு மேல் எந்த முடிவும் எடுக்காமல் தாமதம் செய்ததற்கு மத்திய அரசு எந்த காரணமும் கூறவில்லை.
உள்துறை அமைச்சகத்தில் 5 வருடங்கள் 6 மாதம் கருணை மனுக்கள் எந்த அசைவும் இல்லாமல் தேக்கத்திலேயே இருந்தன. அதுபோலவே, ஜனாதிபதியிடம் 5 வருடங்கள் 6 மாதம் எந்த நகர்வும் இல் லாமல் அப்படியே இருந்தன. இந்தக் காலதாமதம் ஒன்றே 3 பேரின் மரண தண்டனையை ரத்து செய்ய போதுமானதாகும்‘ என்று வாதிட்டார்.
வழக்கு பிப்ரவரி 4ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வாகன்வதி வாதிடும்போது, ‘ காலதாமதத்தை மட்டுமே காரணமாகக் கொண்டு இந்த வழக்கில் உத்தரவிட முடியாது. குற்றத்தின் தன்மையைத்தான் கணக்கில் கொள்ள வேண்டும். காலதாமதம் ஏற்பட்டதை காரணமாகக் கூறி சில வழக்குகளில் தண்டனை குறைக்கப்பட்டது இந்த வழக்கில் பொருந் தாது.
மனுதாரர்கள் இதுவரை தங்களின் குற்றங்களுக்கு எந்த வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. அவர்கள் சிறையில் மன உளைச்சல் எதுவும் இல்லாமல் புத்தகம் படித்தல், எழுதுதல், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று மகிழ்ச்சியுடன் உள்ளனர். இந்த வழக்கின் தன்மை முற்றிலும் மாறுபட்டது. எனவே, தண்டனையை ரத்து செய்யக் கூடாது என்றார்.
இதற்கிடையே, இந்த வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் சார்பில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண் டனையை ரத்து செய்யக் கோரி எழுத்து பூர்வமாக ஒரு மனுவை தாக்கல் செய்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தள்ளிவைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் 3 பேர் தண்டனையை ரத்து செய்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.மூவரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பிற்கு பேரறிவாளன் தாய், உறவினர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தீர்ப்பிற்கு மகிழ்ச்சி தெரிவித்து கோயம்பேட்டில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது
நீதிபதிகள் கருத்து:
3 பேர் விடுதலை குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் முடிவு செய்யலாம் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். 3 பேரின் விடுதலை குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பில் மேற்கண்டவாறு அறிவுறுத்தியுள்ளனர்

No comments: