காதலர் தினத்தில் காதல் ஜோடிகளுக்கு பாதுகாப்பு வேண்டும்: போலீஸ் நிலையத்தில் மாணவர்கள் மனு
நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, அனைத்து மாணவர்கள் பொதுநல சங்க பொதுச் செயலாளர் ராமச்சந்திரன், 30–க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் சென்று துரைப்பாக்கத்தை அடுத்த கண்ணகி நகர் போலீஸ் நிலையத்தில் இன்று ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:–
பிப்ரவரி 14–ந்தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. சென்னையிலும் இது தொடர்பான கொண்டாட்டங்கள் நாளை மறுநாள் நடைபெறும்.
நாளை மறுநாள் பொது இடங்களில் சந்தித்துக் கொள்ளும் காதலர்களுக்கு காவல் துறையினர் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். காதல் ஜோடிகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் தடுக்க வேண்டும்.
காதலர் தினமான பிப்ரவரி 14–ந்தேதி திருமணம் செய்து கொள்ளும் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு, போலீஸ் நிலையத்துக்கு வந்தால், அவர்களுடைய புகார் மனுக்களை ஏற்று பாதுகாப்பு வழங்க வேண்டும். எல்லை பிரச்சினையை காரணம் காட்டி திருப்பி அனுப்பக்கூடாது.
காதலர் திருமணங்களை ஆதரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காதல் பிரச்சினையால் கவுரவ கொலை நடைபெறாமல் தடுக்க வேண்டும்.
காதல் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்க வேண்டும். காதலர்களின் புகார் மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

No comments: