Header Ads

ஆந்திராவில் லிட்டர் 2,000 ரூபாய்க்கு விற்பனையாகும் கழுதைப் பால்

கழுதைகளை வைத்து ஜோக்குகள் மட்டுமல்ல பணமும் சம்பாதிக்கலாம் என்பது தற்போது ஆந்திரா மாநிலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அன்றாட நிகழ்வாகும். 

தெலுங்கானா பிரச்சினையில் மாநிலமே அல்லல் பட்டுக் கொண்டிருக்க, தெலுங்கானாவின் அடிலாபாத் மாவட்டத்தில் உள்ள மன்சேரியல் என்ற ஊரிலிருந்து விசாகப்பட்டினத்தில் வந்து முகாமிட்டிருக்கும் நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர் 15 ஜோடி கழுதைகளுடன் ஜரூராக பால் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். 

25 மில்லி கறந்த பாலை 200 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக சொல்லும் லிங்கம்மா என்ற பெண் மொத்தமாகக் கேட்டால் லிட்டர் 2,000 ரூபாய்க்குத் தருவதாகக் கூறினார். அதிக விலை என்றபோதிலும் இந்தப் பாலில் உள்ள மருத்துவ குணத்தினால் மக்கள் பேரம் பேசாமல் வாங்கிச் செல்வதாகவும் நாள் ஒன்றுக்கு ரூ.700 முதல் ரூ.800 வரை இதில் சம்பாதிப்பதாகவும் அவர் கூறினார். 

விசாகப்பட்டினத்தில் முடித்தவுடன் விஜயவாடாவுக்கு செல்ல இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். புதிதாகப் பிறந்திருந்த தன்னுடைய பேரக்குழந்தைக்குக் கொடுப்பதற்காக கழுதைப்பாலை வாங்கிச் செல்வதாக சத்யவதி என்ற இல்லத்தரசி கூறினார். 

இந்தப் பால் சிறந்த ஆயுர்வேத குணங்களைக் கொண்டிருப்பதால் குழந்தையின் சுகாதாரத்திற்கு நல்லது என்று அவர் கருத்து தெரிவித்தார். மூத்த ஆயுர்வேத மருத்துவரான வி.சுசீலா இதுகுறித்து கூறுகையில், பிறந்த குழந்தைகளிடம் காணப்படும் ஆஸ்துமா, காசநோய் மற்றும் தொண்டை அடைப்புகளுக்கு கழுதைப்பால் சிறந்த மருந்தாகும் என்றார். 

தாய்ப்பாலை ஒத்தது என்ற போதிலும் இதில் புரோட்டீன், கொழுப்புச் சத்துகள் குறைவு. ஆனால் லாக்டோஸ் சத்து அதிகம் என்று விசாகப்பட்டினம் மாவட்டத்தின் விலங்கியல்துறையின் இணை இயக்குநர் வி.வெங்கடேஸ்வர ராவ் தெரிவித்தார். 

முந்தைய காலத்திலிருந்தே ஆஸ்துமா, சுவாசப் பிரச்சினைகள் கொண்ட ஆறு முதல் எட்டு மாதக் குழந்தைகளுக்கு இது மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. 

தோல் மிருதுத் தன்மைக்கும், மெருகேறுவதற்கும் கூட கழுதைப்பால் காரணமாகின்றது. அந்தக் காலத்தில் எகிப்து அழகி கிளியோபாட்ரா கழுதைப்பாலில் குளித்தார் என்றுகூட கூறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். 

No comments:

Powered by Blogger.