3 பேரை காப்பாற்றியும் மனைவியை காப்பாற்ற முடியவில்லையே: ரெயில் விபத்தில் உயிர்பிழைத்தவர் உருக்கம்
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் இருந்து மராட்டிய மாநிலம் நந்தெத் நகருக்கு நேற்றிரவு எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று புறப்பட்டுச் சென்றது. இன்று அதிகாலை 3 மணியளவில் ஆந்திரா மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் தர்மா வரம்– பெனுகொண்டா இடையே கொத்தசேரவு ரெயில் நிலையம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது இரண்டடுக்கு படுக்கை வசதி கொண்ட ஏ.சி. பெட்டியில் தீப்பிடித்தது.
ரெயில் ஓடிய வேகத்தில் காற்றின் தாக்கம் காரணமாக தீ மளமளவென பரவியது. இதில் 26 பேர் பலியாகினர். பலர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இச்சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
தீப்பிடித்த பெட்டியில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த சரத் என்பவர், தன் கண் முன் நடந்த சோகம் குறித்து கூறுகையில், “நான், என் மனைவி உள்பட எங்கள் குடும்பத்தினர் 5 பேர் அருகருகே படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்தோம். எரியும் உணர்வு ஏற்பட்டதால், திடீரென எழுந்தோம். அப்போது, பெட்டிக்குள் தீ பரவிக்கொண்டிருந்தது. என்ன செய்வது எனத் தெரியாமல் அனைவரும் குழப்பத்தில் இருந்தனர்.
உடனே சாமர்த்தியமாக செயல்பட்ட நான் டாய்லெட்டில் உள்ள கண்ணாடியை உடைத்து 3 பேரை அதன் வழியாக தப்பிக்க வைத்தேன். ஆனால் என் மனைவியையும், மாமாவையும் காப்பாற்ற முடியவில்லை“ என்று கதறி அழுதார்.
தன் தந்தையுடன் அந்த பெட்டியில் பயணம் செய்த பாட்டீல் கூறுகையில், “தீப்பிடித்ததை அறிந்து எழுந்து பார்த்தபோது, ஒவ்வொருவரும் கத்திக் கூச்சலிட்டுக்கொண்டிருந்தனர். ஒருவழியாக நாங்கள் இருவரும் ரெயிலில் குதித்து தப்பினோம். பின்னர் நெடுஞ்சாலைக்கு வந்து பஸ் பிடித்து பெனுகொண்டாவுக்கு வந்து, அங்கிருந்து வேறு ரெயிலில் பெங்களூரை அடைந்தோம். இது எங்களுக்கு மறுபிறவி” என்றார்.
ரெயில் தீப்பிடித்து எரிந்தது அக்னிக் குண்டம் போன்று இருந்தது. ரெயிலில் இருந்து குதித்து சிறிது தூரத்தில் இருந்து பெட்டி எரிவதைப் பார்த்தோம். எல்லாம் 15 நிமிடங்களுக்குள் முடிந்துவிட்டது. உதவி கேட்டு அலறித் துடித்தது வேதனையாக இருந்தது என்று பாட்டீலின் தந்தை தெரிவித்தார். அவரது காலில் லேசான தீக்காயங்கள் இருந்தன.
No comments: