அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட இந்திய துணை தூதரின் தந்தை உள்துறை அமைச்சர் ஷிண்டேவை சந்தித்தார்
கடந்த சில தினங்களுக்கு முன் நியூயார்க்கில் இந்திய துணைத் தூதராக பணிபுரியும் தேவயானி கோப்ரகடே, தனது மகளை பள்ளியில் விட்டுச்செல்ல காரில் வந்தபோது, பொதுமக்கள் முன்னிலையில் கைவிலங்கிடப்பட்டு கைது செய்யப்பட்டார்.
கைவிலங்கிடப்பட்டு தூதர் கைது செய்யப்பட்டதை கண்டித்த இந்தியா, உடனடியாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பாவெலை நேரில் வரவழைத்து, இனி இதுபோன்று நடக்காமல் பார்த்துக்கொள்ளுமாறு கூறியது. மேலும் இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளின் அடையாள அட்டையை இந்திய அரசிடம் திரும்ப ஒப்படைக்குமாறு அரசு உத்தரவிட்டது. அத்துடன் அமெரிக்க தூதரகம் மற்றும் அதன் அதிகாரிகளுக்கு விமான நிலையங்களுக்குள் நுழையும் அனுமதி சீட்டையும் அரசு ரத்து செய்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க காங்கிரஸ் குழுவினரை சந்திக்க பாராளுமன்ற சபாநாயகர் மீரா குமார், உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி ஆகியோர் மறுத்துவிட்டனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட துணை தூதர் தேவயானி கோப்ரகடேயின் தந்தை இன்று உள்துறை அமைச்சர் ஷிண்டேவை சந்தித்து பேசினார். அப்போது அரசாங்கம் கோப்ரகடேயின் பின்னால் நிற்பதாகவும், அது தங்கள் கடமை என்றும், அவருக்கு இழைக்கப்பட்ட, முற்றிலும் கோரமான நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாகவும், தொடர்ந்து அரசாங்க வேலைகளை தூதர் செய்துகொண்டிருப்பதாகவும் ஷிண்டே தெரிவித்தார்.
கோப்ரகடேவுக்கு ராஜதந்திர பாதுகாப்பு உள்ளதாகவும், அவருக்கு தீங்கு நேராமல் அரசு பார்த்துக் கொள்ளுமெனவும், அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவருடைய செயல்பாடுகளுக்கு எவ்வித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என ஷிண்டே மேலும் தெரிவித்ததாக தூதரின் தந்தை கூறியுள்ளார்.
No comments: