சிங்கப்பூரில் பஸ்ஸிலிருந்து தள்ளி விடப்பட்ட தமிழ்த் தொழிலாளர் பலி - கலவரம்- வாகனங்கள் எரிப்பு
சிங்கப்பூரில் தமிழரான பஸ் பயணி ஒருவரை, பஸ்ஸின் பெண் ஓட்டுநர் கீழே தள்ளி விட்டதில் அவர் படுகாயமடைந்து உயிரிழந்தார். இதையடுத்து தமிழர்கள் அந்தப் பஸ்ஸை தீவைத்துக் கொளுத்தினர். இதையடுத்து 25 க்கும் மேற்பட்ட தமிழர்களைப் போலீஸார் கைது செய்துள்ளதால் பதட்டமாக இருக்கிறது.
சிங்கப்பூரில் இதுபோன்ற மோதல் கடந்த 40 ஆண்டுகளில் வெடித்ததில்லை என்பதால் அங்கு போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
போலீஸார் கைது செய்யக் கூடும் என்ற அச்சத்தாலும், சீன வம்சாவளியினர் தங்களைத் தாக்கக் கூடும் என்பதாலும் பெரும்பாலான தமிழர்கள் வேலைக்குப் போகாமல் வீடுகளில் முடங்கிக் கிடப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்தன. தற்போது நிலைமை அமைதியாக இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
லிட்டில் இந்தியா
சிங்கப்பூரில் ஏராளமான வெளிநாட்டவர் வேலை நிமித்தமாக தங்கியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் ஆவர். இவர்கள் லிட்டில் இந்தியா எனப்படும் பகுதியில் வார இறுதி நாட்களில் கூடி சந்தித்துக் கொள்வர்.
தமிழர்களின் சிறந்த போக்கிடம்
லிட்டில் இந்தியா ஒரு பெரிய சந்தைப் பகுதியும் கூட தமிழர்கள்தான் இங்கு பெரும்பாலும் புழங்குவர். தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கும், நண்பர்களைச் சந்திக்கவும் இது தான் அவர்களுக்கான சிறந்த போக்கிடமும் கூட. தமிழர்கள் மட்டுமல்லாமல் இலங்கையர்கள், வங்கதேசத்தவர், பாகிஸ்தானியர் என தெற்காசியர்கள் கூடும் பகுதியும் இதுதான்.
பஸ்சிலிருந்து தள்ளி விடப்பட்ட தொழிலாளர்
இதேபோல நேற்றும் அங்கு பெரும் திரளானோர் கூடியிருந்தனர். அப்போது தமிழகத்தைச் சேர்ந்த 33 வயது தொழிலாளர் ஒருவர் தனியார் பேருந்தில் ஏறியுள்ளார். ஆனால் அந்தப் பயணியை பஸ்ஸின் பெண் ஓட்டுநர் பிடித்துக் கீழே தள்ளி விட்டார். இதில் அவர் தலையில் அடிபட்டு பரிதாபமாக அங்கேயே உயிரிழந்தார்.
பஸ்சுக்கு தீவைப்பு
இதைப் பார்த்து அங்கு கூடியிருந்தோர் பெரும் ஆவேசமடைந்தனர். அனைவரும் ஒன்று கூடி அந்த பஸ்சைத் தாக்கினர். பஸ்ஸுக்குத் தீவைக்கப்பட்டது. இதில் பஸ் எரிந்து போனது.
போலீஸார் தாக்குதல்
இதையடுத்து சிங்கப்பூர் போலீஸார் - இவர்களில் பலர் சீன வம்சவாளியினர் - தாக்குதலில் ஈடுபட்டவர்களைத் தாக்கத் தொடங்கினர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த நிலையில் இரண்டு போலீஸ் வாகனங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. மேலும் அந்த பகுதிக்கு வந்த ஆம்புலன்ஸும் தாக்கி தீவைக்கப்பட்டது.
தடியடி
இதையடுத்து போலீஸார் தடியடியில் இறங்கினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்திக் கலைத்தனர். இதையடுத்து அவர்கள் சிதறி ஓடினர். 25க்கும மேற்பட்டவர்களைப் போலீஸார் கைது செய்து பிடித்துச் சென்றனர்.
குடிபோதையில் தாக்குதலா...
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குடிபோதையில் இருந்ததாகவும், பீர் பாட்டில் உள்ளிட்டவற்றை தூக்கிப் போட்டதாகவும், பஸ்சை தாக்கியவர்களை அவர்கள் பாராட்டியதாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
7 ஆண்டு சிறை - சவுக்கடி
கைது செய்யப்பட்டவர்கள் கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறி குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இவர்களை கோர்ட்டில் நிறுத்தவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர். இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு 7 ஆண்டு வரை சிறைத் தண்டனை கிடைக்கும் மேலும் சவுக்கடியும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைதி திரும்பியது - போலீஸ்
தற்போது லிட்டில் இந்தியா பகுதியில் அமைதி நிலவுவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். நிலைமை கட்டுக்குள் வந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிங்கப்பூர் பிரதமர் கோபம்
இந்த மோதல் குறித்து சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் கூறுகையில், கலவரம் ஏற்பட என்ன காரணமாக இருந்தாலும் இதுபோன்ற செயலை ஏற்க முடியாது என்றார். மேலும் அவர் கூறுகையில், சட்டப்படி கலவரத்தில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுப்போம். கலவரத்தில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
1969க்குப் பிறகு
1969ம் ஆண்டு சிங்கப்பூரில் இன ரீதியான மோதல்கள் வெடித்தன. அதன் பிறகு அங்கு அதுபோன்ற மோதல் வந்ததில்லை. இப்போதுதான் முதல் முறையாக வந்திருப்பதால் சிங்கப்பூரில் பதட்டம் காணப்படுகிறது
No comments: