Header Ads

காதலின் தீர்க்கம் - MUD படம் ஒரு பார்வை

சினிமாவில் சொல்லப்படுகிற அனைத்து கதைகளும் ஏற்கனவே ஏதோ ஒருவிதத்தில் சொல்லப்பட்டவையே. நல்ல திரைப்படமும், மோசமான திரைப்படமும் கதையால் அல்ல, அதனை சொல்லும் முறையாலே வித்தியாசப்படுகின்றன. மட் திரைப்படத்தைப் பார்க்கையில் இந்த எண்ணம் மேலெழ வாய்ப்பு உண்டு.


மட் 2012 ல் கான் திரைப்பட விழாவில் சிறந்தப் படத்துக்கான பாம் டி ஓர் விருதுக்கு போட்டியிட்ட படம். ஆனால் விருது கிடைக்கவில்லை. கிடைத்திருந்தால்தான் ஆச்சரியப்பட வேண்டும். அதற்காக மட் மோசமான திரைப்படம் என்று அர்த்தமில்லை.

சின்ன வயதிலிருந்து ஒன்றாக வளர்ந்த இருவருக்குள் காதல் உருவாகிறது. அந்தப் பெண் அவனைவிட்டு வேறொரு பணக்காரனுடன் உறவு வைத்துக் கொள்கிறாள். அவன் மோசமானவன் என்று சின்ன வயது காதலன் சொல்வதை அவள் கேட்கவில்லை. கர்ப்பமாகிறாள். பணக்காரன இளைஞன் அவளை துன்புறுத்துவதில் கர்ப்பம் கலைந்து போகிறது. காதலன் அவனை கொன்று விடுகிறான்.

கொலை செய்யப்பட்ட இளைஞனின் குடும்பம் - அவனது அண்ணன் மற்றும் வயதான தந்தை - காதலன் இருக்குமிடத்தை தேடி அலைகிறார்கள். தனது காதலியை தேடி அவன் வருவான் என்று அவள் இருக்கும் இடத்தை தொடர்ந்து கண்காணிக்கிறார்கள். காதலியை அழைத்துச் செல்ல மிசிசிபி நதி உருவாக்கிய சிறிய தீவில் காதலன் காத்திருக்கிறான். அங்கிருக்கும் உடைந்த படகை சரி செய்து காதலியுடன் தப்பி செல்வது அவன் நோக்கம்.

இந்தக் கதையின் பெரும்பாலான விஷயங்கள் படத்தில் வருவதில்லை. தீவில் காதலனான மட் காத்திருப்பதிலிருந்து கதை தொடங்குகிறது. அதுவும் டீன்ஏஜ் பருவத்தை நெருங்கும் சிறுவன் ஒருவனின் பார்வையில்.

படத்தில் இயக்குனர் தேர்வு செய்திருக்கும் பின்னணிதான் படத்துக்கு அபாரமான நிறத்தை தருகிறது. அமெரி=க்காவின் அர்கான்சாஸ் மாகாணத்தில் உள்ள டீ விட் என்ற நகரத்தில் கதை நடக்கிறது. டீ விட்டின் பெரும்பகுதி மிசிசிபியின் முகத்துவாரத்தை ஒட்டியது. தண்ணீருக்கு மேல் அமைக்கப்பட்ட வீடுகள். போக்குவரத்து பெரும்பாலும் படகுகள். நகரத்துக்குள் மட்டும்தான் கார், பைக் போன்ற இன்னபிற வாகனங்கள். 

எல்லிஸ், நெக்போன் என்ற இரு சிறுவர்கள் மிசிசிபி தனது பாதையில் உருவாக்கிய தீவுக்கு வருகிறார்கள். அங்கு மரத்துக்கு மேலே ஒரு படகு சிக்கிக் கொண்டிருக்கிறது. அதனை தயார் செய்து தங்களுக்கு உரிமையானதாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். அது மிசிசிபியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் மரத்தில் மாட்டிக் கொண்டதாக இருக்கலாம்.

ஆனால் அந்தப் படகை யாரோ பயன்படுத்துவதை அறிந்து கொள்கிறார்கள். நதிக்கரையில் தூண்டில் போட்டுக் கொண்டிருக்கும் அந்நியன் ஒருவனை சந்திக்கிறார்கள். அதுதான் மட்.

இந்தக் கதையின் அடிநாதம் மட் தனது காதலியின் மீது வைத்திருக்கும் பேரன்பு. ஆனால் அவர்களின் காதல் படத்தில் காட்டப்படுவதில்லை. சிறுவர்களிடம் தனது கதையை மட் தெரிவிக்கும் போதுதான் வார்த்தைகளாக அவனது காதல் நமக்கு தெரிய வருகிறது. மேலும், எல்லிஸும், நெக் போனும் மட்டின் காதலியை சந்தித்து ரகசியமாக அங்கிருந்து கிளம்பும் திட்டத்தை சொல்லும்போது அதனை கேட்டுக் கொள்கிறவள் குறிப்பிட்ட நேரத்தில் பாருக்கு இன்னொரு நபருடன் குடிக்க போய் விடுகிறாள். எல்லிஸுடன் மட் ஏற்படுத்திக் கொள்ளும் நட்பு, படகை சீரமைக்க எடுத்துக் கொள்ளும் சிரத்தை ஆகியவற்றிலிருந்தே மட்டின் காதலின் ஆழத்தை உணர்ந்து கொள்கிறோம்.

படத்தை செழுமைப்படுத்துவது எல்லிஸின் பின்னணி. அவனது பெற்றோர் விவாகரத்து செய்யும் முடிவில் இருக்கிறார்கள். அவனது தாய்க்கு மிசிசிபி கரையோரத்தை விடுத்து நகரத்தில் குடியேற வேண்டும் என்று ஆசை. அந்த வீடு அவன் தாய்க்கு உரிமை உள்ளது என்பதால் தனக்குப் பிடித்தமான வீட்டில் தந்தையுடனும் வசிக்க இயலாது. தாயுடன் சென்றாக வேண்டும். டீன் ஏஜ் பருவத்தில் வரும் காதலும் அவனை அலைக்கழிக்கிறது. நெக்போன் தனது மாமாவின் ஆதரவில் இருப்பவன்.

இவர்களின் பின்னணி காரணமாக மட்டுடன் அவர்கள் நட்பு ஏற்படுத்திக் கொள்வதையும், அவன் ஒரு கொலையை செய்தவன் என்று தெரிந்த பிறகும் படகை சீரமைக்க திருட்டுவரை செல்ல துணிவதையும் கேள்வி கேட்காமல் நம்மால் படத்தில் ஒன்ற முடிகிறது. படத்தின் இறுதியில் மட் டும் அவன் காதலியும் ஒன்று சேர வேண்டும் என நம்மையறியாமல் விரும்பிப் போகிறோம். அதுதான் படத்தின் வெற்றி.

மிசிசிபியின் முகத்துவாரத்தில் தண்ணீருக்கு மேல் அமைக்கப்பட்ட வீடுகளும், சொற்ப மனிதர்களை கொண்ட நகரமும் கதையின் பின்னணியாக அமைக்கப்பட்டது இப்படத்தின் தனிச்சிறப்பு. படத்தை இயக்கிய ஜெஃப் நிக்கோல்ஸ் ஆர்கான்சஸ் பகுதியைச் சேர்ந்தவர். அதன் அழகை அவரால் அப்படியே திரையில் கொண்டுவர முடிந்திருக்கிறது. மட் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மேத்யூ மெக்கென்னகியின் உடல்மொழி, காதலுக்காக எதையும் செய்யும் விட்டேத்தியான நபரை கண்முன் கொண்டு வருகிறது. ஆழமும் சுழிப்பும் கொண்ட நதியின் இலகுவான அமைதியைப் போன்ற உடல்மொழி அது.

இறுதி சண்டைக் காட்சி மொத்த படத்தின் தன்மையிலிருந்து விலகியிருந்தாலும், அதன் முடிவு அதனை சமன் செய்து விடுகிறது.

No comments:

Powered by Blogger.