Header Ads

தமிழக பத்திரிகையாளர் மகா. தமிழ் பிரபாகரன் இலங்கையில் கைது

தமிழகத்தை சேர்ந்த பத்திரிகையாளர் தமிழ் மகா பிரபாகரன் கிளிநொச்சியில் உள்ள ராணுவ முகாமை படமெடுத்தது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த தமிழ் மகா பிரபாகரன், ஈழத்தில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது பாதிக்கப்பட்ட தமிழ் ஈழ மக்களின் துயரங்களை தமிழகத்திலுள்ள வார இதழ் ஒன்றில் தொடராக எழுதினார்.

இந்நிலையில், இலங்கைக்கு சுற்றுலா விசாவில் சென்ற தமிழ் மகா பிராபாகரன் அங்குள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், வடக்கு மாகாண சபை உறுப்பினரான பசுபதி பிள்ளை மற்றும் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் எஸ்.தயாபரன் ஆகியோருடன் சேர்ந்து பொன்னவெளியிலுள்ள தேவாலயத்தின் பங்குத்தந்தையுடன் உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது அவரை ராணுவத்தினரும், காவல்துறையினரும் இடைமறித்து கைது செய்தனர்.

கிட்டத்தட்ட 50 ராணுவ வீரர்களால் பகல் 1.30 மணியளவில் சுற்றி வளைக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களும், அவரும் கைது செய்யப்பட்டனர், அவர்களது கேமராவும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் அனைவரும் ஜெயபுரம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு சுமார் 4 மணி நேரம் விசாரணை செய்யப்பட்டனர்.

விசாரணைக்குப்பின் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டபோதிலும் தமிழ் மகா பிரபாகரன் இலங்கை புலனாய்வுத் துறை போலீசாரால் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும், அவருடைய வெளியுலக தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Powered by Blogger.