பரிந்துரைக்கப்பட்ட கமிஷன் வழங்கக்கோரி பெட்ரோல் விற்பனையாளர்கள் 24-ந்தேதி வேலைநிறுத்தம்
தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் ஏ.ஆர்.தாமோதரன், பொதுச் செயலாளர் எம்.ஹைதர்அலி, பொருளாளர் கே.பி.முரளி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் பொதுச் செயலாளர் எம்.ஹைதர்அலி நிருபர்களிடம் கூறியதாவது:-
அபூர்வ சந்திரா கமிட்டியின் பரிந்துரைப்படி பெட்ரோல், டீசல் கமிஷனை வழங்க வேண்டும். விலைவாசி மற்றும் விலை உயர்வுக்கு ஏற்ப 6 மாதங்களுக்கு ஒரு முறை கமிஷன் மாற்றி அமைத்தல், ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பள விகிதத்தினை வழங்க ஆவன செய்தல் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் உள்ளன.
இந்த பரிந்துரைகளை மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் கண்டு கொள்வதாக தெரியவில்லை. ஆகவே அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், அகில இந்திய பெட்ரோலிய வணிகர்களின் கூட்டமைப்பான சி.ஐ.பி.டி. அழைப்பிற்கு இணங்க இரண்டுகட்ட போராட்டம் நடத்தப்படுகிறது.
வருகிற 22, 23 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் உள்ள 4,400 பெட்ரோல் விற்பனை நிலையங்களும், இந்தியா முழுவதும் உள்ள 44 ஆயிரம் பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் விளக்குகள் அணைத்து வைக்கப்படும். ஆனால் பெட்ரோல், டீசல் விற்பனை நடைபெறும்.
மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் தொடர்ந்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், அதைத்தொடர்ந்து 24-ந்தேதி நாடு முழுவதும் பெட்ரோலிய விற்பனையாளர்கள் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். 23-ந்தேதி நள்ளிரவு 12 மணி முதல் 24-ந்தேதி நள்ளிரவு 12 மணி வரை பெட்ரோல், டீசல் விற்பனை நடைபெறாது.

No comments: