Header Ads

துணை தூதர் தேவயானி கைது: அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி ஜான் கெர்ரி இந்தியாவிடம் வருத்தம் தெரிவித்தார்

அமெரிக்காவில், நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகத்தில் துணை தூதராக பணிபுரிந்து வருபவர், தேவயானி கோப்ரகடே(வயது 39). அவருடைய வேலைக்காரப் பெண் சங்கீதா என்பவருக்கு விசா பெற்றதில் மோசடி செய்ததாக குற்றம்சாட்டி, அமெரிக்க போலீசார் பெண் தூதர் தேவயானியை கைது செய்தனர். தனது குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு திரும்பும்போது வீதியில் அவரை கைது செய்த போலீசார், தேவயானிக்கு கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றனர்.

அத்துடன் அவருடைய ஆடைகளை களைந்து சோதனை நடத்தியதுடன், போதை வழக்கில் கைதான கிரிமினல் குற்றவாளிகளுடன் அவரை அடைத்து வைத்து அவமரியாதை செய்தனர். இந்த சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அமெரிக்காவுக்கு எதிராக பல்வேறு பதிலடி நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

ஆனால், இந்த பிரச்சினையில் தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வரும் அமெரிக்க அரசு, தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் இந்த பிரச்சினை நேற்று கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

உறுப்பினர்களின் ஆவேச கண்டனத்துக்கு பதில் அளித்து பேசிய வெளியுறவு துறை மந்திரி சல்மான் குர்ஷித், பெண் தூதர் தேவயானியை மீட்டு, இந்தியாவின் கவுரவத்தை காப்பாற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், அதுவரை பாராளுமன்றத்துக்கு திரும்ப மாட்டேன் என்றும், சபதம் ஏற்றார்.

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பைத் தொடர்ந்து, பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்த நிருபர்கள், பெண் தூதர் தேவயானி கைது விவகாரம் குறித்து கருத்து கேட்டனர். பெண் தூதரை அமெரிக்கா நடத்திய விதத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த மன்மோகன்சிங், இந்த சம்பவம் மிகவும் வேதனை அளிப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்நிலையில், தேவயானி கோப்ரகடே கைது செய்யப்பட்ட சம்பவத்துக்கு அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி ஜான் கெர்ரி இந்தியாவிடம் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனனிடம் தொலைபேசியில் உரையாடிய ஜான் கெர்ரி, "தேவயானி கோப்ரகடே கைது செய்யப்பட்டது தொடர்பாக அவரையொத்த வயதுடைய இரு பெண்களுக்கு தந்தை என்ற முறையில் நான் மிகவும் வருந்துகிறேன்.

வெளிநாடுகளில் உள்ள எங்கள் நாட்டின் தூதரக அதிகாரிகளுக்கு எவ்வளவு மரியாதை கிடைக்க வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோமோ..? அதற்கு இணையான மரியாதை எங்கள் நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டு தூதரக அதிகாரிகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது.

இந்த கைது விவகாரத்தால் இந்தியா-அமெரிக்கா இடையிலான நெருங்கிய நட்பு பாதிக்கப்படுவதை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது" என்று உறுதியளித்தார்.

No comments:

Powered by Blogger.